திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
M. No.393 இந்துமத சின்னம் மட்டுமே இதுவரை இருந்து வந்தது தமிழ்நாடு அரசு கெஜட்டில். இப்ப எப்படி பௌத்தமத சின்னம் வந்தது? ரொம்ப சிம்பிள்… இது சும்மா sample தான். இதற்கு அவ்வளவா எதிர்ப்பு இல்லைனா.. அடுத்து சிலுவையும் பிரையும் வைப்பானுங்க. அதன் முனடோட்டமே இந்த பௌத்த சின்னம்..
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டுக் கோயில்களில் 2006 வரை பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படாத சூழ்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
அதன்படி சிறு கோவில்களில் மட்டும் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் 2021 ஆகஸ்ட் 14 அன்று திமுக ஆட்சிக்கு வந்த 100-ஆவது நாளில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடித்த 28 பேருக்கு கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட தமிழ்நாட்டின் பெரிய கோவில்களில் அனைத்து சாதியினரும் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இதுநாள் வரையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் இந்து மதத்தின் அடிப்படையில் சின்னம் இருந்ததாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் அது பௌத்த மதச்சின்னமாக மாற்றப்பட்டதாகவும் கூறி, தமிழ்நாடு அரசின் அர்ச்சகப் பயிற்சி பள்ளியின் அறிவிப்பு கார்டு ஒன்றை வலதுசாரிகள் பலரும் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. https://t.co/z0TnvOv3dm
— OmSaranadevendiran 🚩🇮🇳🚩 Single (@OmSaranadeven) June 6, 2023
மேலும் அப்பதிவுகளில் “இந்து மக்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையென்றால் இனி சிலுவை சின்னமும், பிறை சின்னமும் அரசு இதழ்களில் இடம்பெறும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அதன் பக்கத்திலும் சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற இலச்சினை (Logo) இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.
எனவே இந்த இலச்சி (Logo) தற்போது தான் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிய, இந்து சமய அறநிலைத்துறையின் இணையதளத்தில் உள்ள “திருக்கோயில்” எனும் இந்து சமய மாத இதழை ஆய்வு செய்து பார்த்தோம். இந்த திருக்கோயில் இதழ் என்பது 1958-ஆம் ஆண்டிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வெளியிடப்பட்டு வரும் ஒரு மாதாந்திர இதழாகும். இந்த இதழின் 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாத பதிப்பை பதிவிறக்கம் செய்து பார்த்ததில், அந்த இதழின் அட்டைப்படத்திலும் இந்த இலச்சி இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள 2020-2021 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பின் ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்தோம். அந்த ஆவணத்தின் பக்கம் 196-இல் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் எஸ் ராமச்சந்திரன் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும் அந்த இலச்சி இடம்பெற்றுள்ளதை காண முடிந்தது.
மேலும் படிக்க: இந்து சமய அறநிலையத்துறையின் கவனக் குறைவால் 5 இளைஞர்கள் இறந்தார்களா ?
இதற்கு முன்பும் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பரவிய தவறான செய்திகள் குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறையில் பெளத்த மத சின்னம் கொண்டு வரப்பட்டதாகப் பரப்பப்படும் தகவல் பொய்யானது. இந்து சமய அறநிலைத்துறையைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் இந்த இலச்சி கடந்த 2017-ல் அதிமுக ஆட்சின் போதே இருந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.