திமுக அரசு ஓட்டுநர் உரிமத்தில் ‘யூனியன் ஆப் இந்தியா’ என மாற்றியதாக வதந்தி பரப்பும் இந்து மக்கள் கட்சி

பரவிய செய்தி

திமுக தங்களின் பிரிவினைவாத திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அனைத்து அரசு ஆவணங்களிலும் தற்போது யூனியன் ஆப் இந்தியா என உள்ளது. இது சட்டவிரோதமானது மற்றும் இதை வைத்தே அவர்களின் அரசாங்கத்தை பணிநீக்கம் செய்ய முடியும்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு மாநிலத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தில் இருந்து அனைத்து அரசு ஆவணங்களிலும் யூனியன் ஆப் இந்தியா எனக் குறிப்பிட்டு வழங்கி வருவதாகவும், பிரிவினைவாதத்தை செயல்படுத்தி வருவதாகவும் இந்து மக்கள் கட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட பழைய மற்றும் புதிய ஓட்டுநர் உரிம அட்டைகளை காண்பித்து பதிவிட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் 1௦ ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட பழைய ஓட்டுநர் உரிமத்தில் ” இந்திய ஓட்டுநர் உரிமம்(தமிழ்நாடு) ” என இடம்பெற்று இருந்தது. தற்போது வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்தில் ” யூனியன் ஆப் இந்தியா ஓட்டுநர் உரிமம்(தமிழ்நாடு) ” என இடம்பெற்று இருக்கிறது. ஆனால், இதை தற்போதைய திமுக அரசு மாற்றவில்லை.

கடந்த 2௦19ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வேலூரில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் பற்றிய செய்தியில் இடம்பெற்ற ஓட்டுநர் உரிம அட்டையில் ” யூனியன் ஆப் இந்தியா ஓட்டுநர் உரிமம்(தமிழ்நாடு) “ என்றே இருப்பதை பார்க்கலாம்.

இந்து மக்கள் கட்சி ட்விட்டரில் பகிர்ந்த ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமங்களிலும் வழங்கப்பட்ட ஆண்டு 2௦11 மற்றும் 2௦16 என இடம்பெற்று உள்ளதை தெளிவாய் பார்க்கலாம்.

தமிழ்நாடு மட்டும் ஓட்டுநர் உரிமத்தில் ” யூனியன் ஆப் இந்தியா ” என குறிப்பிட்டு வருகிறதா என மற்ற மாநிலங்களில் உள்ள ஓட்டுநர் உரிமங்களை ஆராய்ந்து பார்க்கையில், ” 2௦17 குஜராத் மாநில அரசால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தில் ” யூனியன் ஆப் இந்தியா “ குஜராத் மாநிலம் என குறிப்பிட்டு இருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும், 2௦15-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்திலும் ” யூனியன் ஆப் இந்தியா ” என்றே வழங்கி உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், சமீபத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தில் இந்தியா என்பதற்கு பதிலாக “யூனியன் ஆப் இந்தியா ” என மாற்றி வெளியிட்டதாக இந்து மக்கள் கட்சியால் பரப்பப்படும் தகவல் வதந்தியே. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமத்திலும் மற்றும் குஜராத்தில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்திலும் “யூனியன் ஆப் இந்தியா ” என்றே இடம்பெற்று உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader