அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வித் தகுதிப் பற்றி பாஜகவினரும், தினமலரும் பரப்பியத் தவறான தகவல் !

பரவிய செய்தி
அமைச்சர் எ.வ.வேலுவின் கல்வித்தகுதி 2006ம் ஆண்டு தேர்தல் வெற்றிச் சான்றிதழில் 5ம் வகுப்பு பாஸ் என்றும் 2021ம் ஆண்டு தேர்தலில் எம்.ஏ. வரலாறு என்றும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றதுபோலவும் குறிப்பிட்டுள்ளது
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலுவின் 2006 தேர்தல் வெற்றிச் சான்றிதழில் 5ம் வகுப்பு பாஸ் என்று உள்ளது, ஆனால் 2021ம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு பட்டம் பெற்று உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது என பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரின் பதிவை வைத்து தினமலரும் செய்தி வெளியிட்டு இருந்தது.
கார்த்திக் கோபிநாத் ட்விட்டரில் பதிவிட்ட எ.வ.வேலுவின் தேர்தல் தொடர்பான விவரங்களின் படமானது, ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட திமுகவின் சொத்துப் பட்டியல் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
உண்மை என்ன ?
பாஜகவினரால் பரப்பப்படும் 2006ம் ஆண்டு தேர்தலில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு தொகுதியில் எ.வ.வேலுவின் வெற்றித் தொடர்பான விவரங்கள் குறித்து Myneta தளத்தில் தேடுகையில், அதில் அவருடைய தந்தையின் பெயர் கண்ணு என இடம்பெற்று இருக்கிறது. ஆனால், 2021ம் ஆண்டு தேர்தல் வெற்றி விவரங்களில் அவரின் தந்தை பெயர் எத்திராஜூலு என வெவ்வேறாக இடம்பெற்று இருக்கிறது. மேலும், 2006 மற்றும் 2021க்கு இடையே உள்ள வயதும் தவறாக இருக்கிறது.
மேற்கொண்டு தேடுகையில் 2011ம் ஆண்டு தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது எ.வ.வேலு அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில் வயது 50, தந்தை பெயர் எத்திராஜூலு என்றும், எம்.ஏ பட்டம் பெற்று உள்ளதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
2006ம் ஆண்டு திருவண்ணாமலை தண்டராம்பட்டு தொகுதி தேர்தலில் வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான வ.க.வேலு என்பவர் வேட்புமனுத்தாக்கல் செய்து இருக்கிறார். அவரின் தந்தை பெயர் கண்ணு, வளையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து உள்ளதாகத் தன்னுடைய வேட்புமனுவில் தெரிவித்து இருக்கிறார்.
2006ம் ஆண்டு தேர்தலில் வெற்றிப் பெற்ற எ.வ.வேலு தொடர்பாக Myneta இணையதளத்தில் வெளியிடப்பட்ட விவரங்களில் வ.க.வேலு என்பவரின் வயது, தந்தை பெயர், படிப்பு உள்ளிட்ட விவரங்கள் தவறாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதுவே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டவர்களின் பட்டியலில் வ.க.வேலு என்பவர் பெயர் இல்லை. அந்த தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த 22 பேரில் 3 பேரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது, 5 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்று உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளத்தில் தேடுகையில், அந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினரின் வேட்புமனு விவரங்கள் மட்டும் இடம்பெறவில்லை.
முடிவு :
நம் தேடலில், அமைச்சர் எ.வ.வேலுவின் 2006ம் ஆண்டு தேர்தல் வெற்றிச் சான்றிதழில் 5ம் வகுப்பு பாஸ் என்றும், 2021ம் ஆண்டு தேர்தலில் எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்று உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது.
2006ம் ஆண்டு தேர்தல் விவரங்களில் எ.வ.வேலுவிற்கு பதிலாக வேறொருவரின் விவரங்கள் தவறாக இணைக்கப்பட்டு உள்ளன என்பதையும், 2011ம் தேர்தல் வேட்புமனுவில் எ.வ.வேலு எம்.ஏ பட்டம் பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.