அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை பேசியதாக நாடாளுமன்றம் வரை பொய் பேசும் பாஜகவினர் !

பரவிய செய்தி
திமுக அமைச்சர் திரு எ.வ.வேலு அவர்கள் எதற்காக நிற்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார். இதுதான் இந்தியக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் உண்மை முகம். ஒருமுறை பிரிவினைவாதி, எப்போதும் பிரிவினைவாதி.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சி ஒன்றில் பிரிவினையை ஏற்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார் எனத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 46 வினாடிகள் வீடியோ ஒன்றினை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் ‘தினமலர்’ செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் ‘இவங்க (காங்கிரஸ்) கூட்டணி உறுப்பினர் (திமுக) இங்கே உட்கார்ந்து இருக்கிறார். தமிழ்நாட்டிலே இவங்க சொல்லி இருக்காங்க. இந்தியா என்பது வட இந்தியா மட்டுமே. ராகுல் காந்திக்குத் தைரியம் இருந்தால் இந்தியாவை இழிவுபடுத்தும் திமுகவினர் பேச்சுக்குக் கண்டனம் தெரிவியுங்கள். UPA கூட்டணியின் கட்சிக்காரர் தமிழ்நாட்டில் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.
Our Hon Minister Smt @smritiirani avl in parliament today questioned the deafening silence of the Congress party members over the recent speech of DMK Minister Thiru EV Velu.
The true face of members of I.N.D.I. Alliance stands exposed. pic.twitter.com/S7hMVYc6o6
— K.Annamalai (@annamalai_k) August 9, 2023
நான் மீண்டும் கூறுகிறேன். இந்தியா என்பது வட இந்தியா மட்டுமே எனக் கூறினார். நான் இன்று காந்தி குடும்பத்திடம், காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். இந்தியா என்பது வட இந்தியா மட்டும் தானா? தைரியம் இருந்தால், இந்தியா மீது நம்பிக்கை இருந்தால், உங்கள் கூட்டணி காரருக்குச் சரியான பதிலடி கொடுங்க’ என ஆவேசமாகப் பேசியுள்ளார். இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் பேசும் போது ‘திமுக அமைச்சர் ஒருவர் வட இந்தியாதான் இந்தியா என பேசுகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன ?
அமைச்சர் எ.வ.வேலு பேசியது குறித்து முழுமையான வீடியோவினை தேடினோம். கடந்த 5ம் தேதி (ஆகஸ்ட்) ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’ சார்பாக நடைபெற்ற ‘கருஞ்சட்டை விருது’ வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியுள்ளார். இது தொடர்பான பதிவினை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசிய முழு வீடியோ ‘Red pix’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் 21வது நிமிடத்திற்கு மேல் எ.வ.வேலு பிரிவினை பேச்சு பேசியதாக அண்ணாமலை பதிவிட்டிருந்த பகுதி இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் பேசியது : “இன்றைக்கு என்ன நிலைமை. ஒரு காலத்திலேயே நமக்கு இந்தியா என்பதிலே கூட.. அதன் மீது எப்போதும் நமக்குப் பெரிய தாக்கம் இருப்பதில்லை. இந்தியா என்கிற வார்த்தைக்கு எந்த காலத்தில் நமக்கெல்லாம் தாக்கம் இருந்திருக்கிறது. நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்தியா என்கிற பெயருக்குப் பெரிய தாக்கம் ஒரு காலத்தில் இருந்தது கிடையாதே. நான் சொல்வது ஒரு காலத்தில். எங்கே இருந்தது நமக்கெல்லாம். தாக்கம் கிடையாதே. இந்தியா என்றால் எதோ வடக்கே இருக்கும் ஒரு ஊர். நம்ப ஊர் தமிழ்நாடு தான். முடிந்தால் நமது ஊரில் திராவிட நாடு எனச் செய்ய முடியுமா என யோசிப்போம். நமது எண்ணங்கள் இலக்கு எல்லாம் இப்படிதானே போய் கொண்டு இருந்தது” என அவர் கூறியது வரை மட்டுமே அண்ணாமலை பதிவிட்ட வீடியோவில் இருக்கிறது.
அதற்குப் பிறகு, “ஆனால், இன்னைக்கு என்ன நிலைமை. எதோ, எங்கோ தூரத்தில் கேட்கப்பட்ட ஊர் இந்தியா என்பதை மாற்றி, இன்றைக்கு இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்கிற சொற்றொடரை, இந்தியா என்ற சொற்றொடருக்குள் அடங்கி இருக்கின்ற. சமூகம் சார்ந்த பல்வேறு நிலைகளில் இருக்கின்ற பொது சிவில் சட்டமாக இருக்கலாம் அல்லது சிறுபான்மையினர் என்று சொல்லப்படுகிற நமது அன்பு சகோதரர்கள், இஸ்லாமியச் சகோதரர்கள், கிறிஸ்துவ சகோதரர்கள் இவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடுகள் அதன் உள்ளே அடங்கி இருக்கலாம்.
ஆக, இத்தனை உள்ளடக்கி இருக்கின்ற காரணத்தினால்தான் இந்தியா என்பதைக் காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழனுக்குத்தான் இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கின்றது என்பதுதான் இன்றைக்கு இருக்கும் நிலைமை” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு ஒரு காலத்தில் இந்தியா என்கிற பெயருக்குத் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இருந்ததில்லை என்றும், இந்தியா என்றால் வடக்கே இருக்கும் ஒரு ஊர் என்பது போல் இருந்தனர் என்றும் கூறுகிறார். ஆனால், ‘இந்தியா என்றால் வட இந்தியா மட்டுமே’ என்று கூறியதாக ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தவறாக பேசியுள்ளார்.
எ.வ.வேலு பேசியதின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து, அவர் பிரிவினை கருத்து பேசுகிறார் என அண்ணாமலை ஒரு தவறான தகவலை டிவிட்டரில் பதிவிட்டார். அதில் மேலும் பொய் கருத்துகளைச் சேர்த்து ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
மேலும், ஸ்மிருதி இரானியும், பிரதமரும் பேசிய தவறான கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்ககோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதனை எ.வ.வேலு அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முடிவு :
நம் தேடல், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை கருத்து பேசியதாகப் பரவக் கூடிய வீடியோ எடிட் செய்யப்பட்டது. இந்தியா என்கிற பெயருக்கு ஒரு காலத்தில் பெரிய தாக்கம் நமது ஊரில் இருந்தது இல்லை. இந்தியா என்றால் வடக்கே இருக்கும் ஒரு ஊர் என்பது போல் நாம் இருந்தோம் என்றுதான் பேசியுள்ளார்.