கார் வைத்திருப்பவர் வீட்டுக்கு உரிமைத் தொகை வழங்கியதாக தவறாகப் பரவும் திமுக எம்எல்ஏ படம்!

பரவிய செய்தி
இவர்கள் தகுதி வாய்ந்த பெண்களை தேர்வு செய்த லட்சணம் இந்த படத்தில் தெரிகிறது. இந்த வீட்டு மதிப்பை கூட விடுங்கள். அந்த வாசல் கேட் எத்தனை ஆயிரம் பெறும் என பாருங்கள். விடியாத விடியல்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த செப்டம்பர் 15ம் தேதி 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு என சில விதிமுறைகள் விதிக்கப்பட்டு இருந்தது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் போன்றவை அவ்விதிமுறையில் அடங்கும்.
இந்நிலையில் கார் வைத்திருப்பவரின் வீட்டுக்கு உரிமை தொகை ரூ.1000 வழங்கப்பட்டு இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
வீடு, கார் என வசதியாக இருப்பவருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு இருப்பதாகப் பரவும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில் அவர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் என்பதை அறிய முடிந்தது.
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா என்பவர் திமுக கட்சியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது வீட்டிற்கு முன் கோலமிடப்பட்டதைப் புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000/- முதல்வருக்கு நன்றி…’ எனப் பதிவிட்டுள்ளார்.
#கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000/-
முதல்வருக்கு நன்றி…#TNEmpowersWomen pic.twitter.com/Wglb43KzXj— Raja MLA of SNKL (@MLARaja_SNKL) September 15, 2023
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான சில நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. அதன் படி உரிமைத் தொகை பெறுபவரது குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தவிர) யாரும் இருக்கக் கூடாது.
இந்த விதிமுறையின் படி சட்டமன்ற உறுப்பினரது உள்ளவர்கள் யாரும் மகளிர் உரிமை தொகை பெறத் தகுதியான நபர் கிடையாது. அரசின் திட்டத்தை ஆதரிக்கப் பதிவிடப்பட்ட படத்தினை, அவரே பயனாளர் எனத் தவறாகப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : மகளிர் உரிமைத் தொகையைப் பெற்ற பெண்கள் மது அருந்துவதாகப் பொய் பரப்பும் உமா கார்கி !
இதே போல் ரூ.1000 உரிமை தொகை பெற்ற பெண்கள் அப்பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக மது அருந்துவதாகப் பரப்பப்பட்ட தவறான தகவல் குறித்த உண்மை செய்தியை யூடர்ன் வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், வசதி படைத்தவருக்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டதாகப் பரவும் படத்தில் இருப்பவர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. அரசின் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் பதிவிட்ட படத்தினை தவறாகப் பரப்பி வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உரிமை தொகை பெறத் தகுதியுடையவர் இல்லை.