தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் “சவார்க்கர்” பெயர்.. எப்போதிலிருந்து இடம்பெற்றுள்ளது ?

பரவிய செய்தி

1806இல் நடந்த வேலூர் கலகத்தை, 1857இல் நடைபெற்ற ‘முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி’ என வி.டி.சவார்க்கர் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார், எனத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படம்.

மதிப்பீடு

விளக்கம்

வி.டி.சவார்க்கர் என்பவர் வேலூர் கலகம் இந்தியாவின் முதல் சுதந்திர போருக்கு முன்னோடி எனக் குறிப்பிட்டு உள்ளார் என தமிழ்நாடு அரசின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இப்புகைப்படம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழக பள்ளி ஆசிரியரைத் தொடர்பு கொண்டு பேசியதில், 8-ம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அறிவியல் புத்தகத்தில் வி.டி.சவார்க்கரை “வரலாற்றாசிரியர்” என்று குறிப்பிட்டுள்ளது. ஆங்கிலவழி மாணவர்களுக்கான சமூக அறிவியல் புத்தகத்தில் வரலாற்றாசிரியர் எனக் குறிப்பிடவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார். 

ஆனால், தமிழ்நாடு அரசின் இணையதளத்திலுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்ததில், இரண்டு மொழியிலும் சவார்க்கர் “வரலாற்றாசிரியர்”என இருக்கிறது. இப்புத்தகம் 2020-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது, அதிமுக ஆட்சி நடைபெற்றது. 

இதற்கு முன்னர், 2015-ல் தமிழக அரசு வெளியிட்டிருந்த 8-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘வேலூர் புரட்சி (கி.பி.1806)’ என்ற தலைப்பில் பாடம் உள்ளது. ஆனால், சவார்க்கர் குறிப்பிட்டதாக எந்த வாக்கியமும் அந்த பாடத்தில் இல்லை

இதேபோல், 2017-ல் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்ட 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்திலும் ‘வேலூர் கலகம்’ மற்றும் ‘1857-ஆம் ஆண்டு பெருங்கலகம்’ என்ற பாடங்களில் “1857-ம் ஆண்டு முதல் இந்தியச் சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளது. இப்புத்தகம் பதிப்பித்த வருடமான 2017-லும் அதிமுக அரசே ஆட்சி நிர்வாகம் செய்தது.   

இது குறித்து, வரலாற்றுப் பேராசிரியர் பிஜு என்பவரிடம் பேசுகையில், ” சவார்க்கர் “Indian War Of Independence 1857” என்ற புத்தகத்தில் 1857-ம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போருக்கு, வேலூர் கலகம் முன்னோடி எனக் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால், வரலாற்றுப் பேராசிரியரான கே.ராஜய்யன் எழுதிய “தென்னிந்தியக் கலகம்” என்ற புத்தகத்தில் 1799 முதல் 1801 வரை நடைபெற்ற பாளையக்காரர் புரட்சியை முதல் இந்தியச் சுதந்திர போர் எனக் குறிப்பிட்டுள்ளதாகத் ” தெரிவித்தார். 

“சவார்க்கர் முதல் இந்தியச் சுதந்திரம் போர் என 1857 சிப்பாய் கலகத்தைக்  குறிப்பிடுகிறார். உண்மையான வரலாற்றினை இந்தியர் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும்” என 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாடு அரசின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், ” 1806ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857ல் நடைபெற்ற ‘முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி’ என வி.டி.சவார்க்கர் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் என சாவர்க்கர் பற்றி இடம்பெற்று உள்ளதாக பகிரப்படும் புகைப்படம் உண்மை. அது கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே இடம்பெற்று உள்ளது என அறிய முடிகிறது.

Update

வேலூர் கலகம் பற்றிய தவறான தகவலை “வேலூர் கலகம் 1799 முதல் 1801 வரை நடைபெற்றது”, என குறிப்பிட்டிருந்தோம். வாசகர் ஒருவர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அப்பத்தி திருத்தப்பட்டது.

வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு 1806. சவார்க்கர் பிறந்தது 1883ம் ஆண்டு. இரண்டுக்குமிடையே 77 ஆண்டுகள் இடைவெளியுள்ளது. அவர் பிறந்த பல ஆண்டுகள் கழித்தே வேலூர் கலகம் பற்றிய தகவல்களை படித்து தெரிந்து கொண்டிருப்பார். அதற்கு முன்னரே பலர் வேலூர் கலகம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சமூக அறிவியல் பாடநூலை எழுதிய ஆசிரியரின் நோக்கம் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை ”முதல் சுதந்திர போராக” வர்ணிப்பது தமிழ்நாட்டை பெருமைபடுத்துவதாகும் என கருதியிருப்பாரேயானால், 1806க்கும் முந்தைய பாளையக்காரர்கள் புரட்சியை (1799-1801) வரலாற்றாசிரியர் ராஜய்யன் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று குறிப்பிட்டுள்ளதை மேற்கோளாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இதைவிடுத்து சவார்க்காரை பற்றிய குறிப்பு பயன்படுத்தியது உள்நோக்கம் கொண்டதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும், சவார்க்கர் எழுதிய “The Indian War of Independence 1857” என்ற புத்தகத்தில் வேலூர் கலகம் பற்றி முழுமையான வரலாறு குறிப்பிடப்படவில்லை. “வேலூர் கலகம், 1857ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி” என ஒரு வரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு வரி தகவலை கொண்டு 1806 வேலூர் கலகம் பற்றிய பாடத்தில் சவார்க்கரை மேற்கோள்காட்டும் செயல் சவார்க்கரை தொடர்ந்து முன்னிலைபடுத்தும் அரசியலின் ஒரு பகுதியாகாதா ?

பள்ளி புத்தகத்தில் இவ்வாறான தகவல் அதிமுக ஆட்சி காலத்தில் எழுதப்பட்டு இருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேலாகியும் திருத்தப்படாமல் இருப்பது எத்தகையது?

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader