This article is from Oct 18, 2021

தமிழக அரசு பள்ளியில் ருத்ராட்சம் அணிந்ததால் மாணவன் தாக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்ட இந்தி சேனல் !

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் ருத்ராட்சம் அணிந்திருந்ததால் இந்து மாணவ தாக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவ ஆசிரியர் மாணவனை கொடூரமாக அடித்து பள்ளியில் இருந்து வெளியேற்றும் காட்சி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ருத்ராட்சம் அணிந்திருந்த இந்து மாணவனை கிறிஸ்தவ ஆசிரியர் கொடூரமாக அடித்து தாக்கியதோடு பள்ளியில் இருந்து வெளியேற்றியதாகவும், இதுதான் உங்களின் மதச்சார்பின்மை அரசா என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக உள்ளிட்டவர்களை டக் செய்து சுதர்சன் நியூஸ் எனும் இந்தி நியூஸ் சேனலில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

Archive link 

இந்த செய்தி வீடியோவை சுதர்சன் நியூஸ் சேனலின் உரிமையாளர் மற்றும் ஆசிரியரான சுரேஷ் செளகான் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

தமிழக அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவனை கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி கைது செய்யப்பட்ட சம்பவம் சில நாட்களுக்கு முன்பாக அனைத்து செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.

” கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மாணவர்களை அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன்(55) அழைத்து கண்டித்தார்.

இதையடுத்து, அந்த மாணவர்களை ஆசிரியர் சுப்பிரமணியன் முட்டி போட வைத்ததோடு, ஒரு மாணவனை பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தார். இதை வகுப்பில் இருந்த மாணவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து மாணவன் கொடுத்த புகாரின் பேரில், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவனை தாக்குதல், எஸ்.சி.எஸ்.டி பிரிவின் கீழ் ஆகிய வழக்குகள் உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்துள்ளது ” என அக்டோபர் 15-ம் தேதி மாலைமலர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” ஆசிரியர் சுப்பிரமணியால் தாக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர், சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் சுப்பிரமணியனை விசாரணைக்கு பிறகு போலீசார் சிதம்பரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தினர். நடுவர் உத்தரவை அடுத்து அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார் ” என பிபிசி தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோ வைரலான தருணத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிறிஸ்தவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆந்திரசன் பள்ளியில் மாணவர்கள் இருவர் ருத்ராட்சம் அணிந்து வந்த போது ஆசிரியர் ஜாய்சன் என்பவர் அடித்ததாகவும், சக மாணவர்களை விட்டு கொட்ட சொன்னதாகவும் பெற்றோர்கள் தரப்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

Twitter link | Archive link  

இதுகுறித்து, ” பள்ளியின் கமிட்டி கூடி சம்பவம் தொடர்பாக விசாரித்ததோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். பெற்றோரின் புகாரில் உண்மை இருந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளியின் தாளாளர் கூறியுள்ளார். அதேபோல், புகார் தொடர்பாக அக்டோபர் 18-ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் கூறியதாகவும் ” இந்து தமிழ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி அரசு பள்ளியில் மாணவனை ஆசிரியர் அடித்த வீடியோவை தவறாக பயன்படுத்தி இந்தி செய்தி சேனல் வெளியிட்டு இருக்கிறது என புரிந்து கொள்ள முடிகிறது.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளியில் வகுப்புகளை புறக்கணித்து வெளியே சுற்றி வந்த மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியரின் வீடியோவை ருத்ராட்சம் அணிந்திருந்ததால் இந்து மாணவன் தாக்கப்பட்டதாக ஒரு தவறான செய்தியை சுதர்சன் சேனல் வெளியிட்டு இருக்கிறது. அந்த ஆசிரியரின் பெயர் சுப்பிரமணியன் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader