மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போனில் விளையாட்டு.. வைரல் வீடியோ தமிழ்நாட்டைச் சேர்ந்ததா ?

பரவிய செய்தி
தமிழ்நாடு பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள். வைரல் வீடியோ!
மதிப்பீடு
விளக்கம்
தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, திட்டுவது, பள்ளியில் உள்ள இருக்கைகளை உடைப்பது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாகி வருகிறது. இப்படி ஒழுங்கின செயல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும், அறிவுரையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பள்ளி வகுப்பறையில் மதிய இடைவேளையின் போது மாணவிகளின் மடியில் மாணவர்கள் தலை வைத்து செல்போனில் விளையாடுவதாக எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வீடியோ தமிழக பள்ளியில் நிகழ்ந்ததாகவே செய்திகளிலும் வெளியாகி இருக்கின்றன.
உண்மை என்ன ?
ஊடகங்கள் உட்பட வைரலாகும் வீடியோ எந்த பள்ளியில், எப்போது எடுக்கப்பட்டது என்கிற எந்த விவரத்தையும் அளிக்காமலேயே செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும், வைரல் வீடியோவில் பின்னணி ஒலி ஏதும் இன்றி பகிரப்பட்டு இருக்கிறது.
ஆகையால், வைரலாகும் மாணவ, மாணவியர்களின் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2 ஆண்டுகளுக்கு முன்பாக சேத்தன் எனும் ஷேர்சாட் பக்கம் ஒன்றில் இதே வீடியோ ” பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் மலையாள மொழியில் பேசுவது இடம்பெற்று இருக்கிறது. அந்த வீடியோ முடிவடையும் போது @aravindhari0077 எனும் டிக்டாக் ஐடி இடம்பெற்று இருக்கிறது.
இந்த வீடியோவில், மாணவர்கள் படுத்து இருக்கும் இருக்கையில் GPC என எழுதப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதை வைத்து தேடுகையில், அது கேரளாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியை குறிக்கிறது என அறிய முடிந்தது. கேரளா அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சீருடையிலேயே வீடியோவில் இருப்பவர்களும் உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவின் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவியர் மடியில் தலை வைத்து மாணவர்கள் செல்போனில் விளையாடுவது போன்று எடுக்கப்பட்ட டிக்டாக் வீடியோ தற்போது தமிழ்நாடு பள்ளியில் எடுக்கப்பட்டது என தவறாக பரவி வருகிறது என அறிய முடிகிறது.