தமிழகப் பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கை எனத் தவறான செய்தியை வெளியிட்ட தினமலர் !

பரவிய செய்தி

மாநிலப் பாடத் திட்டத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கை. கமுக்கமாக அமல்படுத்தியது தமிழக பள்ளிக் கல்வித்துறை!

மதிப்பீடு

விளக்கம்

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அரசு யாருக்கும் தெரியாமல் அமல்படுத்தி இருப்பதாக தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Archive link 

தினமலர் செய்தியில், ” புதியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழிக் கொள்கை திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் மறைமுகமாக அமலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது . மே 5-ம் தேதி துவங்க உள்ள இந்த தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில், முதல் தேர்வாக மொழிப் பாடத்திற்கும், இரண்டாவதாக ஆங்கிலப் பாடத்திற்கும் தேர்வு நடத்தப்படுகிறது. மூன்றாவது மொழி என்றால், இந்தி , உருது, சமஸ்கிருதம் என எந்த மொழியாகவும் இருக்கலாம். இதில் இருந்து, தமிழகத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இரு மொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் பார்க்கத் துவங்கி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர் ” என ஏப்ரல் 23-ம் தேதி வெளியிட்டு உள்ளது.

உண்மை என்ன ?

இதுகுறித்து, ஏப்ரல் 24-ம் தேதி தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தரப்பில் மறுப்பு தெரிவித்து செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

செய்தி அறிக்கையில், ” தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகுத்தும்
நடவடிக்கைகள் சத்தமின்றி துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு தன்னுடைய மொழிக்கொள்கையை பல்வேறு காலக்கட்டங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது. தாய் மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது.

2006 ஆம் ஆண்டின் தமிழ்நாடு (தமிழ் மொழி கற்கும்) சட்டத்தின்படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனினும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது என தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் தமிழ் மொழியுடன் சேர்த்து, அவர்தம் தாய் மொழியையும், விருப்பப் பாடமாகப் படித்து, தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

எனவே , தமிழ்நாடு அரசால் ஐயமற தெளிவுப்படுத்தப்பட்ட மொழிப் பாடக் கொள்கை குறித்து உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளில் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க : தமிழகத்தில் உருது மட்டுமே கற்பிக்கப்படுகிறதா ?| சிறுபான்மை மொழி கற்பிக்கும் அரசு பள்ளிகள்.

தமிழகத்தில் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இம்மொழிகள் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. அத்தகைய பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டயாம் என அறிவிக்கப்பட்டது.

இப்படி மொழிச் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து 2022-ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் விலக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், மாநிலப் பாடத்திட்டத்தில் மும்மொழிக் கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தியதாக தினமலர் வெளியிட்டது தவறான செய்தி. தமிழகத்தில் கட்டாயப்பாடமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாக படிக்கும் முறை கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader