டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்துவிட்டதாக பொய் செய்திப் பரப்பும் தந்தி டிவி

பரவிய செய்தி

கடந்த 2022 மே 21 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் கட்ட தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்து கணினி வழியாக மதிப்பீடு செய்ய இயலவில்லை என்பதால் குரூப் 2 முதல் கட்ட தேர்விற்கான முடிவுகள் வர தாமதமாவதாக தந்தி தொலைக்காட்சி செய்தி.

Video Link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 முதல் கட்ட தேர்வு 2022 மே 21ம் தேதி நடைபெற்றது. தேர்வு அட்டவணைப்படி செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிந்து 5 மாதம் முடியப்போகும் நிலையில் குரூப் 2 முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், குரூப் 2 தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்துவிட்டதாகவும், அதனால் கணினி வழியாக மதிப்பீடு செய்ய இயலவில்லை என்று தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், விடைத்தாள்ளை மதிப்பீடு செய்யும் இயந்திரம் பழுந்தடைந்துள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. மகளிருக்கான 30% இடஒதுக்கீடை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் மகளிருக்கான Vertical Reservation முறையை மாற்றி Horizontal Reservation முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என 2022 செப்டம்பர் 8ம் தேதி தீர்ப்பளித்தது.

Article Link

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் கட்ட தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்ததால் கணினி வழியாக மதிப்பீடு செய்ய இயலவில்லை என்பதால் குரூப் 2 முதல் கட்ட தேர்விற்கான முடிவுகள் வர தாமதமாவதாகத் தந்தி தொலைக்காட்சி வெளியிட்டிருந்த செய்தி தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

குரூப் 2 முதல் கட்ட தேர்வுக்கான முடிவுகள் தாமதமாவது குறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் 2022 அக்டோபர் 28ம் அன்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிக்கை வெளியிட்டார். அதில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் நடைபெற்றதாகவும், அதனைச் செயல்படுத்த மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Document Link

மேலும், மென்பொருளில் மாற்றங்கள் செய்யும் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்துச் செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்தான அதிகாரபூர்வ தகவல்களுக்கு (www.tnpsc.gov.in) இணையதளத்தை அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

டிஎன்பிஎஸ்சி செயலாளரின் அறிக்கை வெளியான பிறகு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முடிவுகள் குறித்து வதந்திகள் பரவுவதாக தந்தி டிவியே மீண்டும் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால், தந்தி டிவி வெளியிட்ட தவறானச் செய்தியை தற்போதுவரை நீக்கவில்லை.

மேலும் படிக்க : திமுக அமைச்சர் ரூ6.5 கோடிக்கு 1,154 சைக்கிள்கள் வழங்கியதாக தினத்தந்தி வெளியிட்ட தவறான செய்தி

மேலும் படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சி எனப் பரவும் வதந்தி வீடியோ !

இதற்கு முன்பாகவும் தந்தி டிவி பலமுறை தவறான மற்றும் போலிச் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. சில நேரங்களில், தவறான செய்தியின் வீரியத்தால் அந்த செய்தியை தந்தி டிவி நீக்குகிறது. ஆனால், பல நேரங்களில் தவறான செய்தியை வெளியிட்டு விட்டு, மீண்டும் வதந்தி பரவுவதாக செய்தி வெளியிடுகின்றனர்.

மேலும் படிக்க : 4ஜி செல்போன்கள் உற்பத்தியை அரசு நிறுத்தச் சொல்லியதாக தவறானச் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் !

முடிவு :

நம் தேடலில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் கட்ட தேர்வு விடைத்தாள்கள் மழையில் நனைந்து விட்டதால் தாமதம் ஏற்படுகிறது எனத் தந்தி தொலைக்காட்சி வெளியிட்டது பொய்யான செய்தி என்றும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த சில மாற்றங்கள் நடப்பதால் தாமதம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் தெரிவித்து உள்ளார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader