ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறினார் எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

பரவிய செய்தி

ஜப்பானை சேர்ந்த ‘டோகோ’ என்ற நபர் சிலமாதங்களுக்கு முன் 12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார் தற்போது ‘பாண்டா’ அல்லது  ‘நரி’ ஆக மாற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

X link

மதிப்பீடு

விளக்கம்

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் ரூ.12 லட்சம் செலவு செய்து தன்னை நாயாக மாற்றிக்கொண்டார் எனத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by Thanthi TV (@thanthitv)

உண்மை என்ன?

ஒரு மனிதன் எப்படி நாய் மாதிரியான தோற்றத்தில் முழுமையாக மாற முடியும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது குறித்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு கூகுளில் தேடினோம். ‘Euro News’ என்ற தளத்தில் டோகோ குறித்து 2023 ஆகஸ்ட் மாதம் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. 

அதில், விலங்காக மாற வேண்டும் என்கிற தனது சிறு வயது ஆசையை டோகோ ஒரு ஆடையின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் டோகோ ‘I want to be an animal’ என்கிற பெயரில் ஒரு யூடியூப் சேனலும் வைத்திருப்பதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள thumbnail பலவற்றில் ‘Human’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோகோ ‘Rough Collie’ என்ற நாய் இனம் மாதிரியான உடை அணிந்துள்ளார். நாய்கள் சாதாரணமாக நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் இருந்து டோகோவின் வீடியோக்களில் உள்ள காட்சிகள் வித்தியாசப்பட்டு இருப்பதையும் கவனிக்க முடிகிறது. 

மேற்கொண்டு டோகோவின் எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்ததில், ஜப்பான் மொழியில் செயல்படக்கூடிய ‘Magazine Cainz’ என்ற தளத்தில் அவரை குறித்து சமீபத்தில் வெளியாகி இருந்த கட்டுரையைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

அக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் படித்ததில், இந்த உடை தயாரிக்க சுமார் 2 மில்லியன் யென் செலவானதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாண்டா, நரி, பூனை போன்ற விலங்குகளாக மாறவும் தனக்கு ஆசை இருப்பதாக டோகோ தெரிவித்துள்ளார். 

இவற்றில் இருந்து தன்னை நாயாகக் காண்பித்துக் கொள்ள விரும்பிய ஒருவர் நாய் போன்று ஆடை அணிந்து அவரது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. ஆனால், ஒருவர் அறுவை சிகிச்சைகள் மூலம் முழுமையாக நாயாக மாறியது போல் தவறாகப் புரிந்துகொள்ளும்படி தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது.

மனிதர்கள் அறுவை சிகிச்சை, tattoo மூலமாகப் புலி, பூனை, சிறுத்தை  மாதிரியான விலங்குகளைப் போல் தங்களது உடலை மாற்றிக் கொள்வது  உண்டு. ஆனால், ஜப்பானைச் சேர்ந்த டோகோ அவ்வாறு செய்யவில்லை. 

முடிவு: 

ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறியதாகத் தந்தி டிவி வெளியிட்ட தகவல் தவறானது. விலங்காக மாற வேண்டும் என்கிற தனது சிறு வயது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நாய் மாதிரியான உடையைத்தான் அவர் அணிந்துள்ளார். 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader