இனி டோல் கேட் கட்டணம் இல்லையா ?

பரவிய செய்தி
2019 ஜனவரி 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் என பரிசீலனை செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடியில் முன்பு இருந்த கட்டணத்தை விட 10% அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
விளக்கம்
இந்திய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதைக் காண முடிகிறது. இந்நிலையில், மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என உத்தரவு விட்டதாக செய்திகள் தீயாய் பரவி வருகிறது.
பிஜேபி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் டோல் கட்டணம் ரத்து என்ற வாசகத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது ஊடகங்களிலோ இதைப் பற்றிய சிறு செய்தி கூட வெளியாகவில்லை.
பரிசீலனை :
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு எதிராக போராட்டங்கள் எழுவதால் சுங்கச்சாவடி அமைந்து உள்ள மாவட்டத்தின் பதிவைக் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என மத்திய அரசு பரிசீலனை மட்டுமே செய்து வருகின்றது. எனினும், எந்த கட்டணம் இல்லாமல் அனுமதிப்பதை தனியார் நிறுவனங்கள் ஏற்பதில் சிக்கல் உள்ளன.
இதையெல்லாம் விட இந்த பரிசீலனை பற்றிய முதல் செய்தி 2015 மார்ச் 24-ம் தேதியில் வெளியாகி இருக்கிறது. மூன்றரை ஆண்டுகளை கடந்த பின்னும் அதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.
“ சுங்க கட்டணம் தொகை எங்கும் செல்லவில்லை. அவை இங்கு தான் உள்ளது. நீங்கள் சிறந்த சேவை தேவை என ஆசைப்பட்டால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்துங்கள் “ என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜூன் 2018-ல் தொழிலாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.
டோல் கேட்களில் 12 மணி நேரத்தில் திரும்பினால் கட்டணம் இல்லையா ?
சுங்கச்சாவடிகள் நீக்குவது என்பது அரசிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம். ஏனெனில், ஒவ்வொரு 60 கி.மீக்கு அமைந்து இருக்கும் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் வருவாய் மூலம் சாலை பராமரிப்பு மற்றும் சாலை நீட்டிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகையால், முழுவதுமாக கட்டணம் ரத்து என்பது வாய்ப்பில்லாதவை.
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் :
2017-2018-ல் அதிக சுங்க கட்டணம் வசூலித்த மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளில் வசூலிக்கும் தொகையானது 21% அதிகரித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடி அமைந்து இருக்கும் சாலைகளை நீட்டிப்பதால் 14 சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1 , 2018 முதல் முன்பு செலுத்திய கட்டணத்தை விட கார்கள் 10% மற்றும் பிற வாகனங்கள் 4-6% சதவீதம் அதிக தொகை செலுத்த வேண்டி இருக்கும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆக, சுங்க கட்டணம் ரத்து என்ற ஆதாரமில்லா செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.