This article is from Oct 03, 2019

சுங்கச்சாவடி ரசீது வாகன பழுது, எரிபொருள் சேவைக்கு உதவுமா ?

பரவிய செய்தி

இன்று ஓர் தகவல்
டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்..! சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் கவனத்திற்கு.. நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல. பிறகு வேறெதற்கு? என்கிறீர்களா? சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனத்துக்கு ஏற்ப பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும், எதற்கு என்றால்..உங்க பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்.. காரில் செல்பவர்கள் யாருக்காவது
1. மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.
2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் உங்களுக்காக வந்துருவாங்க, வந்து பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க, ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்துடு வாங்க. இது அவங்க கடமையாகும்.
3. பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால்.. தகவல் சொன்னா உங்களுக்கு அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட சுங்கக் கட்டணம் வசூல் பண்றாங்க
இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாமல் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க, மன உளைச்சலாகுறாங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்..

மதிப்பீடு

விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு எதிர்ப்புகள் என்றும் இருந்து வருகிறது. இந்நிலையில், வாகனங்களில் செல்லுபவர்கள் சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டணம் எதற்கெல்லாம் பயன்படுகிறது, சுங்கச்சாவடியில் எந்தெந்த சேவை எல்லாம் அளிக்கப்படுகிறது என்பது குறித்த பதிவு முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன் உண்மைத்தன்மையை அறிந்து கூறுமாறு ஃபாலோயர்கள் கேட்டுக் கொண்டனர். நல்லதொரு தகவல் என முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வேகமாக பரவி வருவதை குறித்து தேடிய பொழுது “ தினமணி ” நாளிதழின் இணையதளத்தில் இதே பதிவு வெளியாகி இருக்கிறது.

இப்படி வெளியான தகவலுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆதாரங்களோ, மேற்கோள்களோ எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியான செப்டம்பர் 24-ம் தேதிக்கு பிறகே வைரலாகி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கிடைக்கக்கூடிய அவசர சேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து பார்த்தோம்.

ஆம்புலன்ஸ் :

2011 டிசம்பர் 8-ம் தேதி மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ” இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம்  223 ஆம்புலன்ஸ்களின் சேவை கிடைக்கும் மற்றும் 24 மணி நேரம் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுவதாக கூறும் தகவலை மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாதா பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளதாக ” குறிப்பிட்டு உள்ளனர்.

இதேபோன்று, 2013-ல் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் ” விதிகளின்படி, ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிற்கு ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு ரோந்து வாகனம் நிச்சயம் இருக்க வேண்டும். இதனால் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை கட்டாயம் ” என வெளியாகி இருக்கிறது.

பழுது பார்ப்பது & பெட்ரோல் சேவை :

நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து சேவைகள் குறித்த தகவல்களே பிரதானமாக இருக்கிறது. இதைத் தவிர்த்து, வாகனங்கள் பஞ்சர் ஆகினால் பஞ்சர் ஒட்டுவது, பழுது பார்ப்பதற்கு, பெட்ரோல் அல்லது டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வது போன்ற சேவைகள் வழங்குவதாக எங்கும் தகவல்கள் இல்லை.

இதைப்படிக்கும் பொழுதே, நம்பக்கூடிய வகையில் இல்லாமல் மிகைப்படுத்திய ஒன்றாகவும் தோன்றுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தில் இப்படியொரு விதிகள், சேவைகள் இடம்பெறவில்லை.

சுங்கச்சாவடி ரசீது :

மேற்கூறிய தகவல்கள் குறித்து மேலும் உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சில சுங்கச்சாவடி அலுவலங்களுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால், அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, சுங்கச்சாவடியை பயன்படுத்தும் வாகன உரிமையாளர் ஒருவரிடம் பெற்ற சுங்கச்சாவடி கட்டண ரசீதுகளில்(டிஜிட்டல் பிரிண்ட்)  அவசர உதவி எண்கள் , அலுவலக தொலைபேசி எண்கள் கீழே இடம்பெற்று இருக்கின்றன.

எனினும், ரசீதுகளில் அவசர உதவி எண், அலுவலக உதவி எண் உள்ளிட்டவை மட்டுமே இருக்கிறது. அதைத் தவிர்த்து மேற்கூறியது போன்று ஒவ்வொரு சேவைக்கும் என எண்கள் இல்லை. கர்நாடக மாநில சுங்கச்சாவடி கட்டண ரசீது ஒன்றில் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான எண்கள் ரசீதின் பின்புறம் அளிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

 

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவல்களில் படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டண ரசீதுகள் வாகன பழுத்திற்கு, எரிபொருள் தேவை உள்ளிட்ட சேவையை வழங்கும் எனக் கூறுவது பொருந்தாத தகவல் . அதற்கு ஆதாரங்கள் இல்லை.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ரோந்து சேவை வழங்கப்பட வேண்டும் என்ற விதிகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன என்பதை மத்திய அரசின் செய்தி அறிக்கை, முதன்மை செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் பட்சத்தில், வாகன பழுது மற்றும் எரிபொருள் தேவைக்கெல்லாம் கட்டண ரசீது உதவும் எனக் கூறுவது முற்றிலும் தவறான தகவல்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader