This article is from Jun 03, 2019

காஷ்மீரில் தன் உயிரை இழந்து 5 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர் !

பரவிய செய்தி

காஷ்மீரில் நீரில் மூழ்கிய இந்து சகோதர, சகோதரிகள் ஐந்து பேரை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்த மனித நேய தீவிரவாதி ரவூஃப் அஹம்து !

மதிப்பீடு

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்கம் பகுதியில் படகு பயணம் மேற்கொண்ட பொழுது ஏற்பட்ட விபத்தில் இருந்து டூரிஸ்ட் கெய்டு ரவூஃப் அஹம்து இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 5 பேரின் உயிரை காப்பாற்றிய பின் உயிரிழந்தார்.

விளக்கம்

மே 31-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மவூரா பஹல்கம் எனும் படகு பயணம் மேற்கொள்ளும் இடத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு தீவிர காற்றின் தாக்கத்தால் நிலைக்குலைந்தது. படகில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தவறி ஆற்றில் விழுந்தனர். அந்நேரத்தில், அவர்களுடன் இருந்த டூரிஸ்ட் கெய்டு ரவூஃப் அஹம்து தார் உடனடியாக ஆற்றில் குதித்து சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றினார்.

படகில் பயணித்த இரு வெளிநாட்டு பயணிகள் உள்பட மொத்தம் 5 பேரை காப்பாற்றிய ரவூஃப் அஹம்து தன் உயிரை இழந்தார். சுற்றுலாப் பயணிகளின் உயிரை காப்பாற்ற முடிந்த 32 வயதான ரவூஃப் அஹம்து ஆல் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவரின் உடல் ஜூன் 1-ம் தேதி பவானி பாலத்தின் அருகே மீட்கப்பட்டது.

மீட்கப்பட் ரவூஃப் அஹம்துவின் உடலானது பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரவூஃப் அஹம்து ஆபத்தான நேரத்தில் தன்னுடைய பாதுகாப்பை பற்றி சிறுதும் கவலைப்படாமல் ஆற்றில் இருந்து ஐந்து உயிர்களை காத்து உள்ளார். ரவூஃப் அஹம்து இளைஞரின் உயிர் தியாகம் பெருமைப்பட வைப்பதாக அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரவூஃப் அஹம்து உடைய உயிர் தியாகத்திற்கு மரியாதை தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ரவூஃப் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார். இதேபோல், அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் ரவூஃப் குடும்பத்திற்கு ex-gratia relief அடிப்படையில் 4 லட்சம் வழங்குவதாக அறிவித்தது.

ரவூஃப் அஹம்து செய்த தன்னலமற்ற உயிர் தியாகத்திற்கு மரியாதை செலுத்த அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. மேலும், ரவூஃப் அஹம்து ஆற்றில் இருந்து 5 ஹிந்து சகோதர சகோதரிகளை காப்பாற்றியதாகவும் மீம்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

” மீட்கப்பட்ட 5 பேரில் இருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். 5 பேரின் பெயர்கள், மதம் குறித்த விவரங்கள் செய்திகளில் வெளியாகவில்லை “.

ஒருவர் தன்னலமற்ற எண்ணத்தில் ஐந்து பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை இழந்துள்ளார். இதில், அவரின் உயிர் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, மீட்கப்பட்ட ஐவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவசியமில்லை. அனைவரும் உயிர்கள் தானே !

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader