சுற்றுலா பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியை வணங்க வைத்தனரா ?

பரவிய செய்தி

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கட்டாயப்படுத்தி திமுகவினர் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்த வைப்பதாக இந்திய தூதரகத்தில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

மதிப்பீடு

விளக்கம்

சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கட்டாயப்படுத்தி வணங்க வைத்ததாக புதிய தலைமுறை செய்தியின் ட்விட்டரில் பதிவாகி இருக்கும் செய்தியை சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

புதிய தலைமுறை செய்தியின் ட்விட்டரில் பதிவாகி இருக்கும் செய்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகி இருக்கிறது. 2019 ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்ட சமயத்தில் அந்த பதிவு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடங்களில் பரவி வருகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

கடந்த 2018-ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை கட்டாயப்படுத்தி கருணாநிதிசமாதியில் வணங்க வைத்தது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்திகள் வெளியாகி உள்ளதா எனத் தேடிப் பார்த்தோம். ட்விட்டரில் அவ்வாறான பதிவுகள் ஏதும் கிடைக்கவில்லை.

செய்தி நிறுவனத்தின் ட்விட்டரில் உள்ள வீடியோவில் நிறுவனத்தின் லோகோ இல்லை. செய்தி நிறுவனங்கள் வெளியிடும் போட்டோ, வீடியோவில் நிச்சயம் லோகோ வைத்து இருப்பர். மேலும், புதிய தலைமுறை செய்தியின் ட்விட்டர் பதிவிற்கும், பரவும் பதிவிற்கும் வேறுபாடுகள் இருப்பதை காண முடிகிறது.

இதையடுத்து, “ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி ” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஆராய்ந்த பொழுது தந்தி டிவியில் ” சுற்றுலாப் பயணிகள் ” கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தும் செய்தி மற்றும் வீடியோ வெளியாகி இருந்தது கிடைத்தது.

அதில், ” ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா வந்த வழக்கறிஞர்கள் குழு மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியதாக ” கூறப்பட்டுள்ளது. அவர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ” இந்த பகுதி மக்களுக்கு நீண்ட காலம் சேவையாற்றிய முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை செலுத்த வந்துள்ளோம் ” எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

பரவும் ஊடக ட்விட்டர் பதிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எனக் குறிப்பிட்டு உள்ளனர், ஆனால் செய்தியில் ஸ்காட்லாந்து நாட்டின் சுற்றுலாப் பயணிகள் என வெளியாகி இருக்கிறது.

மேலும், கருணாநிதி சமாதியில் கட்டாயப்படுத்தி திமுகவினர் அஞ்சலி செலுத்த வைத்ததாக சுற்றுலாப் பயணிகள் இந்திய தூதரகரத்தில் புகார் அளித்து உள்ளார்களா எனத் தேடிய பொழுது அது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கட்டாயப்படுத்தி கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த வைத்ததாக பரவும் செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு போலியானது. அப்படியான செய்திகள் வெளியாகவில்லை.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button