This article is from Oct 04, 2019

தமிழக போக்குவரத்து காவலர்கள் அபராத ரசீதில் தமிழ் இல்லையா ?

பரவிய செய்தி

எங்கே தமிழ் ? தமிழக போக்குவரத்து காவல்துறை ரசீது படிவத்தில் தமிழை நீக்கி இந்தியை திணிப்பது ஏன் ?

மதிப்பீடு

விளக்கம்

ஏதாவதொரு வழியில் தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதாக சர்ச்சைகள் எழுவதை கடந்த காலங்களில் அதிகம் கண்டு வருகிறோம். அதில் ஒன்றாக, சமீபத்தில் தமிழக போக்குவரத்து காவலர்கள் விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கும் ரசீதில் தமிழ் மொழியை நீக்கி விட்டு இந்தி மொழியை திணித்து உள்ளதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

கடலூர் பகுதியின் போக்குவரத்து அபராத ரசீது ஒன்றின் புகைப்படத்தை வைத்து அச்செய்தி பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு பலரும் கேட்டு வருகின்றனர். இதையடுத்து, வைரலான ரசீது குறித்து ஆராய்ந்தோம்.

சர்ச்சையாகும் ரசீது : 

சமீபத்தில் கடலூர் போக்குவரத்து அலுவலகத்தின் பெயரை குறிக்கிற போக்குவரத்து ரசீதிற்கு பணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் மேலே ” e-challan compounding fee deposit receipt ” எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, இணைய வழியிலான ரசீது முறையைக் குறிக்கிறது.

காவல் அதிகாரியின் பதில் : 

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் நமக்கு அளித்த தகவலில், ” போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு parivahan.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தின் வழியாக இணைய ரசீது (e-challan) அளிக்கப்படுகிறது. அந்த இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டுமே உள்ளது. இது இந்தியா முழுவதிற்கும் பொதுவானதாக இருக்கிறது.

பொதுவாக சீட்டு முறையில் எழுதிக் கொடுக்கும் ரசீதுகளில் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டு இருக்கும். ஆனால், இணைய ரசீது முறையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.

மேற்கூறிய  parivahan.gov.in இணையதளத்தில் மாநில மொழிகளுக்கு என தனியாக பிரித்து ஏற்படுத்தி தரவில்லை. இந்தியாவின் மத்திய அலுவல் மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் விவரங்கள் இருக்கும்படி இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.

போக்குவரத்து காவல்துறையின் இணைய ரசீதுகளில்(e-challan) இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருக்கின்றன, மாநில மொழிகள் இடம்பெறவில்லை. நாடு முழுவதிலும் ஒரே இணையதளத்தை பயன்படுத்துவது சர்ச்சை உருவாகி இருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader