அசாமில் 300 கலவரக்காரர்களிடம் இருந்து 1500 பயணிகளை காப்பாற்றிய பெண் ஓட்டுனரா ?

பரவிய செய்தி
300 கலவரக்காரர்களின் உயிரை விட 1500-க்கும் மேற்பட்ட அப்பாவி ரயில் பயணிகளின் உயிர் முக்கியம் என்று ரயிலை நிறுத்தாமல் சென்ற ரயில் ஓட்டுனர், அலறி ஓடிய அஸ்ஸாம் கலவரக்காரர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
குடிமக்கள் பதிவு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலை மறிக்க சென்ற பொழுது 300 கலவரக்காரர்களின் உயிரை விட 1500-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரே முக்கியம் என ரயிலை நிறுத்தாமல் சென்றதாக வீடியோ மற்றும் மீம் பதிவுகள் இந்திய அளவில் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ மற்றும் மீம் பதிவை யூடர்ன் ஃபாலோயர்கள் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் இன்பாக்ஸ் மூலம் அனுப்பி உண்மைத்தன்மையை கேட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
ரயில் தண்டவாளத்தில் இருப்பவர்களை பொருட்படுத்தாமல் ரயில் வேகமாக செல்லும் வீடியோ குறித்து ஆராய்ந்து பார்த்தோம். இதே வீடியோ 2018-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி ” Speedy Train Shoo Protesters away , SC ST ACT Protests at Faridabad BHEEM ARMY ” என்ற தலைப்பில் யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது. 2018 ஏப்ரல் மாதம் பட்டியலின மக்கள் நடத்திய போராட்டத்தினால் 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் இருந்தவர்கள் ரயில்களின் பாதைகளை மறித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
அதில், அசாம் மாநிலத்தின் பெயர் குறிப்பிடவில்லை. மேலும், வைரலாகும் வீடியோ ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத் என கடந்த ஆண்டு வெளியான யூடியூப் வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயிலின் பெண் ஓட்டுனர் :
அசாமியில் கலவரக்காரர்களுக்கு பயப்படாமல் ரயிலை நிறுத்தாமல் ஓட்டிய பெண் ஓட்டுனர் என பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ” ஸ்வகத்திகா பிரியதர்சினி “. ஆனால், அசாமில் ரயிலை நிறுத்தாமல் இயக்கியது எனக் கூறும் தகவல் தவறானது. அது குறித்து செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.
2014-ம் ஆண்டில் டெலிகிராம் செய்தி இணையதளத்தில் வெளியான கட்டுரையில், ரயில்வே துறையில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் ஆக பணிபுரியும் ஸ்வகத்திகா பிரியதர்சினி குறித்த பிரத்யேக பேட்டி வெளியாகி இருக்கிறது. அதில், அவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோர்தா டிவிஷனில் பணிபுரிவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, போராட்டக்காரர்கள் ரயில் செல்லும் பாதையில் வழியை மறித்து இருக்கும் பொழுது அவர்களை கடந்து வேகமாக ரயில் பயணிக்கும் காட்சி குடியுரிமை திருத்த சட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்டவை அல்ல. 2018-ல் ஹரியானா மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம். அந்த ரயிலை இயக்கியது யார் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.
அடுத்ததாக, அதே கதையுடன் பகிரப்படும் பெண் ரயில் ஓட்டுனரின் புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பெண் ஓட்டுனர் ஸ்வகத்திகா பிரியதர்சினி 2014-ல் ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து உள்ளார். தற்பொழுது எங்கு பணிபுரிகிறார் எனத் தகவல் இல்லை. சமீபத்தில் அவரின் புகைப்படம் செய்திகளில் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் மட்டுமே வைரலாகி வருகிறது.