கேரளாவில் நிகழ்ந்ததை உத்திர பிரதேசம் என தவறாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழ்

பரவிய செய்தி
நியூஸ் 7 தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு மரம் வெட்டப்பட்டு கீழே விழும் காட்சியினை பதிவிட்டுள்ளது. அக்காட்சியில் “மரம் அல்ல… சரணாலயம்… மரத்தை வெட்டும்போது அதில் குடியிருந்த பறவைகளின் நிலை என்ன?” என்ற வாசகமும் இடம் உத்திர பிரதேசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
செப்டம்பர் 2, 2022 அன்று நியூஸ்7 தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் மரம் வெட்டப்பட்டு கீழே விழும்போது அதிலிருந்த பறவைகள் சில பறந்து செல்கின்றன. மற்ற பறவைகள் பறக்க முடியாமல் மரத்துடன் சேர்ந்து கீழே விழுகிறது. இதில் பல பறவைகள் இறந்துள்ளதை அந்த வீடியோவில் காண முடிகிறது. வீடியோவில் இந்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
நியூஸ்7 தமிழ் பதிவிட்டுள்ள வீடியோ பற்றி இணையத்தில் தேடியதில், அது கேரளாவில் நிகழ்ந்தது என அறிய முடிகிறது. கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை-66 என்ற சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக மரங்கள் வெட்டப்படுகின்றன.
#WatchVideo: Birds die due to felling of tree in Kerala#Tirungadi #Kerala #Viral #ViralVideo #Trees #HeartBreaking #India #Birds #SaveBirds pic.twitter.com/2mmRgVzf7q
— Free Press Journal (@fpjindia) September 2, 2022
இந்த ஒரு மரம் வெட்டப்பட்டதில் பல பறவைகள் இறந்துள்ளதோடு, நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் இடம்பெயர்ந்துள்ளன. வீடியோவில் இருக்கும் பறவை இந்திய நீர்க்காகம் என அறிய முடிகிறது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை 4ன் கீழ் இந்திய நீர்க்காகம் வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று கேரளாவின் வேறொரு பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மரம் வெட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறையிடம், இன்னும் சில வாரங்களில் பறவைகளின் இனப்பெருக்க காலம் முடிந்து, பறவைகள் பறந்துவிடும். அதன்பிறகு சாலை விரிவாக்கத்திற்கான மரம் வெட்டும் பணியினை தொடருங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்திர பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டப்பட்டது. அதிலும் பல பறவைகள் உயிர் இழந்தன. அந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முடிவு
நம் தேடலில், நியூஸ்7 தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மரம் வெட்டப்பட்டு கீழே விழும் வீடியோ உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்தது அல்ல, கேரளாவில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வெட்டப்பட்ட மரம் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.