This article is from Nov 25, 2019

பார்க்கிங் செய்த காருக்குள் வளர்ந்த மரமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் துளையிட்டு மரம் வளர்ந்து இருப்பதை கண்டு அங்குள்ள மக்கள் ஆச்சரியப்படும் காட்சிகள், காரின் கீழே மரத்தின் அடிப்பகுதி காண்பிக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இது எப்படி சாத்தியம்.

Facebook post | archived link 

மதிப்பீடு

விளக்கம்

நவம்பர் 19-ம் தேதி Daniel Dimentcion என்ற முகநூல் பக்கத்தில் ” Matrix or time traveler failure ” எனும் வாசகத்துடன் பதிவான காரினுள் உட்புகுந்து மரம் வளர்ந்து இருப்பதை மக்கள் சுற்றி பார்க்கும் வீடியோ 30 லட்சம் பார்வைகள், 135 ஆயிரம் ஷேர்களை பெற்று இருக்கிறது. இந்த பதிவை பகிர்ந்த யூடர்ன் ஃபாலோயர், அதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு கேட்டு இருந்தார்.

நம்பமுடியாத வகையில் காருக்குள் உட்புகுந்து மரம் வளர்ந்து இருப்பது இணையதள பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தையும், எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் உருவாக்கி இருக்கிறது . இந்த காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரல்.

Youtube link

இதனுடன் சில கதைகளும் கூறப்பட்டு வருகிறது. ஒருவர் தனது காரினை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார், திரும்பி வந்த பார்த்த பொழுது காருக்குள் மரம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் என ஆச்சரியமூட்டும் கதைகளையும் இணைத்து உள்ளனர்.

உண்மை என்ன ?

உண்மையில், காருக்குள் புகுந்து மரம் வளரவில்லை. அப்படி வளர சாத்தியமும் இல்லை. அது பிரெஞ்சு நாட்டின் நான்டேஸ் நகரைச் சேர்ந்த Royal de luxe எனும் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கலை வேலைபாடு மட்டுமே. இந்நிறுவனம், தெருக்களில் மக்கள் ஆச்சரியப்படக்கூடிய வகையில் கலை வடிவமைப்புகளை உருவாக்குபவர்கள்.

Facebook post | archived link

2019 நவம்பர் 18-ம் தேதி காரில் புகுந்து மரம் வளர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை Royal de luxe தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இதற்கு முன்பாக, Royal de luxe உருவாக்கிய பிற ஆச்சரியமூட்டும் மற்றும் நகைச்சுவையான வேலைபாடுகளை பின்வரும் படங்களில் காணலாம்.

இதேபோல், எரிந்த காருக்குள் மரம் இருப்பதை மக்கள் பார்க்கும் வீடியோ ட்விட்டர் உள்ளடவையில் பதிவாகி இருக்கிறது. எப்படி இத்தகைய கலை வேலைபாடுகளை செய்கிறார்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

Twitter link 

இதில் இருந்து, காருக்குள் மரம் வளர்ந்து இருப்பது போல் வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பிரெஞ்சு நாட்டின் உள்ளூர் வீதிக் கலை நிறுவனத்தால் நிறுவப்பட்டு சென்ற கலை வடிவமைப்பே எனத் தெரிந்து கொள்ளலாம். இதனுடன், கட்டுக்கதைகளை உருவாக்க வேண்டாம், அதனை நம்பவும் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader