திருச்சி பெல் நிறுவன தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றியா ?

பரவிய செய்தி

முதல் முறையாக திருச்சி BHEL நிறுவன தொழிற்சங்க தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி!Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று உள்ளதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் தொழிலாளர்கள் வெற்றியைக் கொண்டாடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இத்தகவலை பாஜகவைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?  

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் அருகே உள்ள இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் உள்ளன. நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகள் போன்றவற்றை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறுவதற்காக அதிகாரம் கொண்ட சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும்.

பெல் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 9 சங்கங்கள் போட்டியிட்டன, மொத்தம் உள்ள 4,565 தொழிலாளர்களின் வாக்குகளில் 4,488 வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தலில் 10% வாக்குகளைப் பெரும் சங்கங்கள் ஒரு உறுப்பினரைப் பெறுவார்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவில், திமுகவின் தொமுச சங்கம் 938 வாக்குகள் பெற்று 2 உறுப்பினர்களுடன் முதன்மை சங்கமாக தேர்வாகி உள்ளது. அடுத்ததாக, அதிமுகவின் ஏடிபி 738 வாக்குகள் பெற்றுள்ளது, மூன்றாவதாக காங்கிரசின் ஐஎன்டியுசி  579 வாக்குகளையும், நான்காம் இடத்தில் பாஜகவின் பிஎம்எஸ் 571 வாக்குகளையும், ஐந்தாம் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு 568 வாக்குகளை பெற்று உள்ளது. இந்த சங்கங்கள் அனைத்தும் தலா 1 உறுப்பினரை பெற்றுள்ளன.

அதிக வாக்குகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட முதன்மை சங்கமாக மீண்டும் திமுகவின் தொமுச சங்கம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கீகாரத் தேர்தலில் பாஜக ஒரு உறுப்பினரை பெற்று தேர்வாகி உள்ளது. ஆனால், தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி என தவறாகப் பதிவிட்டு உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், திருச்சி பெல் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. பெல் நிறுவன தொழிலாளர்களுக்காக உள்ள சங்கங்களுக்கு நடத்தப்பட்ட அங்கீகார தேர்தலில் திமுகவின் தொமுச 2 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம் சார்ந்த சங்கங்கள் தலா 1 உறுப்பினரைப் பெற்றுள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader