சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்ததால் திருச்சி பாஜக பிரமுகர் கொலையா ?

பரவிய செய்தி

சிஏஏ-விற்கு ஆதரவு தெரிவித்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ததற்காக திருச்சி பாஜகவைச் சேர்ந்த ரகு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பாஜக பிரமுகர் விஜயரகு வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பின்னால் மதம் சார்ந்த வன்மம் இருந்தாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜயரகு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பேரணி நடத்தியதன் காரணமாக கொலை செய்யப்பட்டதாகவும் பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisement

Facebook link | archived link

பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

Twitter link | archived link

கொலை செய்த குற்றவாளியை உடனடியான கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொலை சம்பவம் மதம் சார்ந்த காரணத்தினால் நடந்து உள்ளதாக பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

ஜனவரி 27-ம் தேதி பாஜகவைச் சேர்ந்த விஜயராகுவை(40) சுற்றி வளைத்த கும்பல் வெட்டி கொலை செய்தது. இதில், மிட்டாய் பாபு என அழைக்கப்படும் முகமது பாபு என்பவர் முக்கிய குற்றவாளியென காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆரம்பத்திலேயே கொலைக்கான காரணம் முன்விரோதமாக இருக்கக்கூடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்பின்னர், பாபுவின் புகைப்படம் செய்திகளில் வெளியாகி தேடுதல் வேட்டை தொடங்கியது.

Youtube link | archived link  

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் (பொறுப்பு) அமலராஜ், ” கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குற்றம் செய்தது யார் என தெரிந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். குற்றவாளிகள் அனைவரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, குறைந்தது இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டும் பேரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். காவல்துறை விசாரணையின் அடிப்படையில் பார்க்கையில், இது மதத்தின் அடிப்படையில் நடந்த கொலையாகத் தெரியவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக ” கூறியுள்ளார்.

கொலையில் முக்கிய குற்றவாளியான மிட்டாய் பாபு பாஜக பிரமுகர் ரகுவின் மகளுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததால் கடந்த ஓராண்டிற்கு முன்பு இருந்தே பிரச்சனை தொடங்கி உள்ளது என செய்திகளில் வெளியாகி இருக்கிறது. காதல் விவகாரம் மற்றும் லாட்டரி டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பல காரணங்கள் செய்திகளில் கூறப்படுகிறது. எனினும், ரகுவின் கொலைக்கு பின்னால் தனிப்பட்ட காரணங்களே இருக்கின்றன என காவல்துறை தெரிவித்து உள்ளது.

குற்றவாளியான பாபுவின் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. குறிப்பாக, கடந்த 6 மாதங்களான குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாபு ஜனவரி மாதம் பரோலில் வந்துள்ளார். இதுபோன்ற குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டியது அவசியம்.

காவல்துறை அளித்த தகவலில் இருந்து, திருச்சி பாஜக பிரமுகர் கொலை சிஏஏ ஆதரவிற்கோ அல்லது இந்து என்பதாலோ நடக்கவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. அதைவிடுத்து, அரசியல் காரணத்திற்காக தவறான தகவலை பரப்புவது ஏற்புடையது அல்ல.

Update :
போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான மிட்டாய் பாபு , சைக்கோ சங்கர் ஆகியோரை சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சென்னையில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விஜயரகு கொலை தொடர்பாக சுடர்வேந்தன், சச்சின் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
சிஏஏ ஆதரவு மற்றும் இந்து மதம் என திருச்சி விஜயரகு கொலைக்கு மத காரணங்கள் பரப்பப்பட்ட நிலையில் கைது செய்தவர்களின் விவரங்கள் தனிப்பட்ட பகைக்கே கொலை நடந்து உள்ளதை வெளிப்படுத்துகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button