This article is from Sep 04, 2019

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்த திமுக பிரமுகர் உள்பட 4 பேர் கைது !

பரவிய செய்தி

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர் மற்றும் கூட்டாளிகள்.

மதிப்பீடு

விளக்கம்

குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரையில் பாலியல் வன்புணர்விற்கு சிக்கி பாதிக்கப்படும் சம்பவங்களில் மாற்றுத்திறனாளி பெண்களும், குழந்தைகளும் அடங்கி உள்ளனர் என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியே.

திருச்சியில் திமுகவின் பிரமுகர் உள்பட 4 பேர் சேர்ந்த கும்பலால் 7 மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக தமிழ்நாடு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாயார் தினக்கூலி வேலைகளுக்கு செல்வதால் சிறுமியை அவரின் தாத்தாவின் கவனிப்பில் விட்டுச் சென்றுள்ளார். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கும்பலில் இருந்த ஒருவருக்கு சிறுமியின் தாத்தாவை நன்றாக தெரியும். எனினும், 7 மாதங்களாக சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளானது வெளியே தெரியாமலே இருந்துள்ளது. தன் மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த பிறகே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆகஸ்ட் 28-ம் தேதி சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு ஆகஸ்ட் 29 மற்றும் 31 ஆகிய நாட்களுக்குள் குற்றவாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

” குற்றவாளிகள் பி.செல்வராஜ்(49), டி.செல்வராஜ்(51), முத்து(57) மற்றும் ராமராஜ்(45) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பி.செல்வராஜ் என்பவர் பேரமங்கலம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருமுறை இருந்துள்ளார். மேலும், திமுகவின் திருச்சி மாவட்ட விவசாயிகள் அமைப்பின் துணை அமைப்பாளராக இருந்துள்ளார். டி.செல்வராஜ் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், முத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். ராமராஜ் எரிபொருள் நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருவதாக ” போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

” குற்றவாளிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி 20 வாரங்கள் கர்ப்பமாய் இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மைனர் பெண் என்பதால் சிறுமி குறித்த தனிப்பட்ட தகவல்களை வழங்க இயலாது ” என திருச்சி ஜெயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதியில் 11 வயது மாற்றுத்திறனாளி குழந்தையை லிப்ட் ஆப்ரேட்டர் உள்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கு இன்னும் சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : விபத்தில் இறந்த பெண்ணிடம் மோதிரத்தை திருடும் திமுக தொண்டர்| எப்பொழுது நிகழ்ந்தது ?

சமீப காலமாக திமுக கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு செய்தியாவது அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக விபத்தில் இறந்தவரின் கையில் இருந்து நகையை திமுக கரை வேட்டி கட்டியவர் திருடியதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதில் இருந்து நாம் எத்தனை மோசனமான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிய வைத்துக் கொண்டிருக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader