This article is from Mar 17, 2020

திருச்சியில் கொரோனா வைரஸ் பாதித்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டமா ?

பரவிய செய்தி

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உறையூர்யை சேர்ந்த இளைஞர் தப்பியோட்டம்.. இவரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பயந்து ஓடும் நிகழ்வுகள் நிகழ்வதை செய்திகளில் வாசிக்க முடிந்தது.

இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் இருந்த உறையூரைச் சேர்ந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும், அவரிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சமூக வலைதளத்தில் ஓர் ஸ்க்ரீன்ஷார்ட் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பாதுகாத்து கொள்ள எச்சரிக்கை செய்யும் செய்தி குறித்து தேடிய பொழுது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் ஏதும் வெளியாகவில்லை.

மாறாக, உறையூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. எனினும், அவரது இறப்பு சான்றிதழ் வெளியான பிறகே எதனால் உயிரிழந்தார் என்பது தெரிய வரும் என மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவரின் தோற்றமும், இறந்தவரின் தோற்றமும் வெவ்வேறாக இருக்கிறது.

மார்ச் 16-ம் தேதி வெளியான செய்தியில், திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றபோதிலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாக வெளியாகி இருக்கிறது.

திருச்சி அரசு மருத்துவமமனையில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளி தப்பி ஓடியதாக  செய்தியை மூன்று வெவ்வேறு நபர்களின் புகைப்படத்துடன் பரப்பி உள்ளனர் என்பதையும் முகநூல் மூலம் அறிய முடிந்தது. வேண்டாதவர்கள் புகைப்படத்தை வைத்து முகநூலில் பரப்பும் விஷம வதந்தி என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” அதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டவர்களும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்தவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக கூறுவதில் உண்மை இல்லை ” என பதில் அளித்து இருந்தனர்.

வைரல் செய்யப்படும் செய்தியில் இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அறிய முடியவில்லை. எனினும், மாஸ்க் அணிந்து மருத்துவமனையில் இருக்கும் நபரின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஜனவரி 29-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான செய்தியில் அந்த நபரின் வீடியோவே வெளியாகி இருக்கிறது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து வந்த மருத்துவ மாணவர் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் புகைப்படத்தை வைத்து திருச்சி அரசு மருத்துவனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதித்தவர் தப்பி ஓட்டம் என வதந்தியை கிளப்பி உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader