ரூ.100 கோடி மதிப்பில் பெரியாருக்கு சிலை வைப்பது தமிழ்நாடு அரசு எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு 39 கோடியில் கருணாநிதியின் நினைவிடத்தை மேம்படுத்துவதாக வெளியிட்ட அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்மறையான கருத்துக்களை பெற்றது.
இந்நிலையில், திருச்சியில் தந்தை பெரியாருக்கு ரூ.100 கோடி மதிப்பில் 135 அடியில் பிரமாண்ட சிலையை திமுக அரசு அமைக்க உள்ளதாக ஓர் செய்தித்தாளின் பக்கம் மற்றும் பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
திருச்சியில் பெரியாருக்கு 135 அடியில் பிரமாண்ட சிலையை நிறுவ இருப்பது தமிழ்நாடு அரசு அல்ல. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பிலேயே சிலை நிறுவப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி மட்டுமே அளித்து இருக்கிறது.
அங்குசம் எனும் இணையதளத்தில், ” பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ” பெரியார் உலகம் ” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்கு தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் செய்தித்தாளிலும், ” பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூரில் பிரமாண்ட அளவில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செயலாளராக இருக்கிறார். மேற்கண்ட நிறுவனம் சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. கிடப்பில் இருந்த திட்டத்துக்கு தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார் ” என இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.
100 கோடியில் 135 அடி உயர பெரியார் சிலை!
– தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி#Seeman | #Periyar pic.twitter.com/L5MYq6JvXM— நாம் தமிழர் செய்திகள் (@NtkSeithigal) September 6, 2021
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ” பெரியார் யார், குழந்தைக்கு பெயர் வைக்க, வீட்டுக்கு சாப்பிட வரும் போது காசு வாங்குவார். தன் மீது வீசப்படும் செருப்புகளை மேடையில் வைத்து விற்று சேத்து வச்ச பணத்தில் பள்ளி, கல்லூரிகளை கட்டினார். அது இப்போ யாரிடம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
நீங்கள் பேருந்து கட்டணம் இல்லாத பயணம் எனச் சொல்கிறீர்கள் காரணம் வறுமை, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 எனச் சொல்கிறீர்கள் காரணம் வறுமை. இப்படி வறுமையில் இருக்கும் போது, இதையெல்லாம் மாற்ற வந்த சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசிய ஐயா பெரியாருக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைக்கிறேன் என பேசுவது எப்படி, அவர் 3,000 கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்ததற்கும், நீங்கள் 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதற்கும் என்ன மாறுபாடு இருக்கிறது. இங்கு பெரியாருக்கு போதுமான அளவு சிலைகள் இருக்கிறது. பின்னர் எதற்காக, இதற்கு பெயர் தான் பணக் கொழுப்பு, அதிகாரத் திமிர் ” என சிலை அமைப்பதற்கு எதிராக பேசினார்.
சீமான் திமுகவின் திட்டங்களையும், அதிகாரத் திமிர் என்ற சொல்லையும் பயன்படுத்தி பேசியது அரசு பெரியாருக்கு சிலை வைப்பதாக குறிக்கிறது. இதையடுத்து, அவரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் எதிர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், திருச்சியில் தந்தை பெரியாருக்கு ரூ.100 கோடி மதிப்பில் சிலையை அமைப்பது தமிழக அரசு சார்ப்பில் என பரப்பப்படும் தகவல் தவறானது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பிலேயே பெரியார் சிலை, நூலகம், பூங்கா அமைய உள்ளது என அறிய முடிகிறது.