கர்ப்பிணி மனைவியை இழந்தவர் மூன்று மாத கருவை காட்டச் சொல்லி கதறல்.

பரவிய செய்தி
திருச்சியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், தலைகவசம் அணியாமல் சென்ற வாகனத்தை துரத்தி சென்று எட்டி உதைத்ததால் கீழே விழுந்த கர்ப்பிணி பெண் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதிப்பீடு
விளக்கம்
தஞ்சை மாவட்டத்தின் அய்யம்பேட்டை பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராஜா என்பவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன் 3 மாத கர்ப்பிணி மனைவியான உஷா உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில், துவாக்குடி சுங்கச்சாவடி பகுதி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஒட்டி வந்த தம்பதியினரை மறித்தனர். எனினும், நிற்காமல் சென்ற வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்றுள்ளார். விரட்டி சென்ற காவல் ஆய்வாளர் திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே தம்பதியினரின் வாகனத்தை எட்டி உதைத்துள்ளார்.
காவலரின் இத்தகைய செயலால் நிலைத்தடுமாறிய தம்பதியினர் வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில், கர்ப்பிணி பெண்ணான உஷா கீழே விழுந்த நேரத்தில் பின்னால் வந்த வேன் மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனது கண்முன்னே கர்ப்பமாக இருந்த மனைவி இறந்த அதிர்ச்சி அவரை மீள இயலாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வரப் போவதாக மகிழ்ச்சியில் இருந்த தம்பதியினரின் வாழ்கையை சீர்க்குலைத்தது காவல் ஆய்வாளர் காமராஜின் பொறுப்பற்ற செயல். உஷா இறக்கும் போது வயிற்றினுள் மூன்று மாத சிசு இருந்துள்ளது. மருத்துவனையில் உஷாவின் போஸ்ட்மார்டன் முடிந்ததும் சிசுவின் முகத்தை காண்பிக்க சொல்லி கணவன் ராஜா கதறியதை பார்க்க முடியாமல் மருத்துவ ஊழியர்களும் சேர்ந்து கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளரின் முறையற்ற செயலால் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சாவூர், திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று இரவு போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டன. சிறிது நேரத்தில் கல் வீச்சு சம்பவங்கள் போன்றவற்றால் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, போலீசார் நடத்திய தடியடியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் மற்றும் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே போர்களமாக மாறியது. கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
காவல் ஆய்வாளர் வாகனத்தை எட்டி உதைத்தால் உஷா என்ற கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது. தலைகவசம் அணியவில்லை, ஓட்டுனர் உரிமம் இல்லை என பொதுமக்களை காவல் துறையினர் விரட்டிப்பிடிப்பது, லஞ்சம் கேட்பது, தாக்குவது என பல சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பாக நவம்பர் 2017-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜேஷ் என்ற இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற காரணத்தால் காவல் உதவி ஆய்வாளர் துரத்தி சென்று லத்தியால் தாக்கியதில் இளைஞரின் மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை விரட்டி பிடிப்பது, தகாத வார்த்தையில் பேசுவது போன்ற செயல்களால் பெண்கள் உள்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளை காவலர்கள் விரட்டிப் பிடிக்க வேண்டாம் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சென்னை காவல் ஆணையர், சட்டத்தை மீறுவோரிடம் கூட கனிவாகவும், மனித நேயத்துடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றே அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.
மறுபுறம், தலைகவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி தக்கலை பகுதியில் தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்க காவல் துறையினர் பேனா, சாக்லேட் போன்றவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதாக காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டாலும், பொதுமக்களும் சாலை கட்டுப்பாடுகளை மதித்து நடத்தல் அவசியம் ஆகும். 2016 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்புகள்படி, தலைகவசம் அணியாததால் நாள் ஒன்றுக்கு 28 பேர் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி இறக்கின்றனர். இந்தியாவில் இருசக்கர வாகன விபத்தில் 1,946 எண்ணிக்கையுடன் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டி பிடிக்கும் செயல்களில் காவல் துறையினர் ஈடுபடுவது எவ்வாறு தவறான செயலோ, அதேபோல் சாலை விதிகளை மதிப்பதும், தலைகவசம் அணிவதும் நமது கடமையாகும்.. சாலை விதிகளை மதித்திருந்தால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்க கூட வாய்ப்பில்லை என்பதையும் நாம் அறிய வேண்டும். இனியும் இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Updated :
வாகனச் சோதனையின் போது போலீசார் வாகனத்தை எட்டி உதைத்ததால் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி உஷா உயிரிழந்தார். உஷாவின் மரணம் தொடர்பாக சம்பந்தபட்ட காவல் அதிகாரி காமராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ii) மற்றும் 336 பிரிவுகளின் கீழ் பெல் போலீசார் வழங்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று உஷாவின் பிரதேசப் பரிசோதனை அறிக்கையை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதில், உஷாவின் வலதுபுற சினைப்பையில் சிறிதாக கட்டி ஒன்று இருப்பதாகவும், இடதுபுற சினைப்பையில் கரு ஏதுமில்லாமல் இயல்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, உஷா கர்ப்பிணி இல்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், உஷா கர்ப்பிணியாக இருந்தாலும், இல்லையென்றாலும் வழக்கின் விசாரணையில் அல்லது பிரிவுகளில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட எஸ்.பி சிபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உஷாவின் கணவர் கூறுகையில், உஷா ஒரு நாள் என்னிடம் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்ப்பதற்குள் இறந்து விட்டார். கர்ப்பப்பையில் கட்டி இருக்க வாய்ப்பே இல்லை. உஷாவின் உடலை மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்த பிறகு வழக்கின் போக்கையே மாற்றி விட்டனர். போலீசார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.