கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஃபிடேல் காஸ்ட்ரோவின் மகன் என பரவும் வதந்தி.

பரவிய செய்தி
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கியூபாவின் புரட்சியாளர் ஃபிடேல் காஸ்ட்ரோவின் மகன் என்பது பலரும் அறியாத உண்மை.
மதிப்பீடு
சுருக்கம்
ஃபிடேல் காஸ்ட்ரோ மற்றும் ஜஸ்டினின் தாயாரான மார்கரெட் ட்ரூடோ இருவரும் முதன் முதலில் 1976-ம் ஆம் ஆண்டில் தான் சந்தித்துள்ளனர். ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ 1971-ம் ஆண்டிலேயே பிறந்து விட்டார்.
விளக்கம்
கியூபாவின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட புரட்சியாளர் ஃபிடேல் காஸ்ட்ரோவின் இறப்பு குறித்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நவம்பர் 26, 2016-ல் வெளியிட்ட அறிக்கையில், “ கியூபாவின் மக்களுக்கு தன் பிரம்மாண்டமான அர்ப்பணிப்பு மற்றும் அன்பை அளித்த மூத்த தோழர் காஸ்ட்ரோவின் இழப்பால் ஆழமான மற்றும் நீடித்து வரும் வருத்தத்தை காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கண்டு உணர வேண்டும்.
என் தந்தை அவரின் தோழன் என்று கூறுவதில் பெருமைப்படுவார் என்பதை நான் அறிவேன் மற்றும் என் தந்தையின் இறப்புக்கு பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சமீப கியூபா பயணத்தில் காஸ்ட்ரோவின் மூன்று மகன்கள் மற்றும் சகோதரர் ரால் காஸ்ட்ரோவை சந்தித்தது பெருமை அளிப்பதாக கூறியிருந்தார். காஸ்ட்ரோ தன் குடும்ப நண்பர் என்ற எண்ணத்தில் ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு கூறினார்.
இதையடுத்து 27, நவம்பர் 2016-ல் reddit என்ற வலைப்பக்கத்தில், ஜஸ்டின் ட்ரூடோ ஃபிடேல் காஸ்ட்ரோ மற்றும் கனடாவின் முன்னாள் பிரதமரின் மனைவியான மார்கரெட் ட்ரூடோ ஆகிய இருவருக்கும் இடையே இருந்த காதலால் பிறந்த மகன் என்று ஓர் செய்தியை வெளியிட்டது.
இதில், பொருந்தாத மூன்று செய்திகள் கூறப்பட்டுள்ளது. 1. ஃபிடேல் காஸ்ட்ரோ மற்றும் மார்கரெட் ட்ரூடோ இருவரும் 1971-ல் சந்தித்தது, 2. இருவருக்கும் இடையே உள்ள காதல் உறவு 3. காஸ்ட்ரோ போன்று ஜஸ்டின் தாடியுடன் இருக்கும் தோற்றம்.
கனடாவின் முன்னாள் பிரதமர் Pierre Trudeau மற்றும் ஃபிடேல் காஸ்ட்ரோ ஆகிய இருவரின் வாழ்க்கை பாதையும் சந்தித்து 1970-ல் பிரிட்டிஷ் வர்த்தக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரத்தில் தான். இதன் பிறகு காஸ்ட்ரோ மற்றும் ஜஸ்டினின் தாயாரான மார்கரெட் ட்ரூடோ இருவரின் முதல் சந்திப்பு 1976-ம் ஆம் ஆண்டில் கியூபாவில் கனேடிய பிரதமரின் வருகையின் போதே நிகழ்ந்தது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு முன்பாகவே பிறந்து விட்டார்.
ஆனால், மார்கரெட் ட்ரூடோ தன் தேனிலவுக்கு பின்பு காஸ்ட்ரோவை ஏப்ரல் 22-ல் சந்தித்து விட்டு வந்ததாக பொருந்தாத செய்தி ஒன்றை கூறியுள்ளனர். ஏனெனில், ஏப்ரலில் நயாகரா பகுதிக்கு சென்ற கனடா பிரதமரின் பயணத்தில் மார்கரெட் இடம்பெறவில்லை என்பதே. மார்ச் 8, 1971-ல் தன் தேனிலவை முடித்த பின் ஒத்டவாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்ற மார்கரெட் ட்ரூடோ, தனது திருமணத்திற்கு பிறகு சரியாக 10 மாதங்கள் கழித்து கிறிஸ்மஸ் நாட்களில் ஜஸ்டினை ஈன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் காஸ்ட்ரோவின் இளமைக் கால படத்துடன் ஒப்பிட்டும், தாடியுடன் இருப்பது போன்ற ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களும் தவறான கருத்துகளுடன் வலம் வருகிறது.
எனவே, ஃபிடேல் காஸ்ட்ரோ மற்றும் மார்கரெட் ட்ரூடோ இருவரும் 1971-ம் ஆண்டுக்கு முன்பே சந்தித்ததாக கூறிய கருத்தை ஏற்க காரணமும் இல்லை மற்றும் தகுந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில், இருவருக்கும் இருந்த பொது வேலைகளில் சந்திப்பு என்பதை மக்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடும். அமெரிக்காவின் reddit வலைப்பக்கத்தில் ஒரு தேசத்தின் புரட்சியாளன் மற்றும் மற்றொரு தேசப் பிரதமரின் மனைவியையும் தவறாக இணைத்து செய்தியை வெளியிட்டதே வதந்தி பரவுவதற்கான தொடக்கம்.
ஒரு நாட்டின் தற்போதைய பிரதமரின் தாய் மற்றும் ஒரு உலகறிந்த போராளியின் வாழ்வை கொச்சை செய்வதில் உள்நோக்கம் என்னவோ…..
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.