கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி வெளியிடயுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தாரா ?

பரவிய செய்தி
அடுத்த ஞாயிற்றுக்கிழமை ரோச் மெடிக்கல் கம்பெனி தடுப்பூசியை வெளியிட உள்ளதாகவும் மற்றும் அதற்காக மில்லியன் கணக்கில் டோஸ்கள் தயார் செய்ய உள்ளதாகவும் ட்ரம்ப் நேரடியாக அறிவித்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 எனும் பெரும் தொற்று உலக அளவில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றுள்ளது. இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிய தருணத்தில் இருந்தே இதற்கு பின்னால் அமெரிக்க சதி இருப்பதாக வதந்திகள் பரவின.
அதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி தயாராக உள்ளதாகவும், அதை வெளியிடப் போவதாக கூறி இருக்கிறார், நாடகம் முடிந்தது என மேற்காணும் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் அமெரிக்க சதி எனக் கூறி வந்தவர்கள் தற்போது இதையும் பரப்பத் தொடங்கி உள்ளார்கள். இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோ காட்சி இடம்பெற்ற முழுமையான வீடியோவில் டொனால்ட் ட்ரம்ப் தனது உரையில் கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசியை வெளியிடப் போவதாக பேசவில்லை. மார்ச் 13-ம் தேதி குளோபல் நியூஸ் யூடியூப் சேனலில் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் அறிவித்த போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது. வைரலாகும் வீடியோவின் கீழே ” President trump declare national emergency ” என்பதை காணலாம். வைரலாகும் வீடியோவில் பேசுவது ரோச் மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த Matt Sause ஆவார்.
வீடியோவின் 19வது நிமிடத்தில் ட்ரம்ப் ரோச் மருத்துவ நிறுவனத்தின் வட அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி Matt Sause-ஐ பேச அழைப்பார். அதன்பின் பேசத் தொடங்கிய Matt Sause, ” தனது நிறுவனத்தின் கோவிட்-19 தொற்று சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்ததற்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, நாடு முழுவதும் நோயாளிகளுக்கு சோதனைகளை வழங்க கூட்டாட்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ” கூறுகிறார். அதற்கான சோதனைகளில் மூன்றரை மணி நேரத்தில் முடிவுகளை வழங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க : சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது அமெரிக்க சதியா ?
இந்த முழு செய்தியாளர்கள் சந்திப்பிலும், ட்ரம்ப் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தடுப்பூசி குறித்து பேசி இருக்கிறார். அதில், சோதனைக்கான காலம் மற்றும் சில காரணங்களால் தடுப்பூசி மேம்படுத்தும் பணிகள் நேரம் எடுப்பதாக வல்லுநர்கள் கூறியதை தெரிவித்து இருப்பார்.
ரோச் நிறுவனம் மற்றும் மற்ற நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். எனினும், எந்தவொரு நிறுவனத்தின் தயாரிப்புக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசிபி), ” கோவிட்-19 தொற்றை தடுக்க தற்போது தடுப்பூசி ஏதும் இல்லை எனத் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார மையமும் அதையே தெரிவித்து உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.