அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு. இதற்கு எந்த பீட்டாவும் (PETA) குரல் கொடுக்காதது ஏன் ? சீனப் பிரதமர் மகாபலிபுரம் – சென்னை வந்தப்ப தெரியாத்தனமா ஒரு நாய் உள்ள புகுந்ததற்காடா இத்தனை களேபரங்கள் ?
Kishore Khanmk எனும் முகநூல் பக்கத்தில், இந்தியாவிற்கு வரும் அமெரிக்க அதிபரின் வருகைக்காக குஜராத் அரசு ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று வருவதாக வாகனத்தில் இருக்கும் இறந்த நாய்களின் புகைப்படத்துடன் வெளியான பதிவு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு சென்னை மகாபலிபுரத்தில் நிகழ்ந்த பொழுது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தெரு நாய் ஒன்று புகுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இம்முறை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக குஜராத் அரசு தெரு நாய்களை கொன்று வருவதாக ஓர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயத் தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
தெரு நாய்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதாக காண்பிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் குறித்து தேடிய பொழுது, அவை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவை அல்ல, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவை என்பதற்கான தகவல்கள் கிடைத்தன. மேலும், நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்துள்ளது, சமீபத்தில் இல்லை.
2019 ஜூன் 23-ம் தேதி நியூஸ் 18 இணையதள செய்தியில், ” தெலங்கானாவின் சித்திப்பேட்டையில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் 40 நாய்களின் சடலங்களை ஏறிந்த தொழிலாளர்கள் குழுவின் செயல்கள் வீடியோ எடுக்கப்பட்டு ட்விட்டர் உள்ளிட்டவையில் வெளிவந்துள்ளது. சித்திப்பேட்டையைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் வித்யா என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோவில், இறந்த 40 நாய்களின் உடல்கள் காண்பிக்கப்படுகின்றன, தெரு நாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த சித்திப்பேட்டை நகராட்சி அதிகாரிகளிடம் இருந்து உத்தரவைப் பெற்ற பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் கூறியுள்ளார்கள். ஏஎன்ஐ தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை கொட்டப்பட்ட மேலும் 30 நாய்களின் உடல்களை குழுவினர் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சித்திப்பேட்டை காவல்துறையினர் விலங்குகள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகளை பதிவு செய்து உள்ளதாகவும் ” வெளியாகி இருக்கிறது.
2019 ஜூன் 24-ம் தேதி The print செய்தியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் 13-வது வினாடியில் நாய்களின் இறந்த உடல்கள் வாகனத்தில் இருப்பதை காணலாம். தற்பொழுது வைரலாகும் புகைப்படம், வீடியோவில் இருக்கும் 25 வினாடியில் இருக்கும் காட்சியும் ஒன்றே என்பதை ஒற்றுமைப்படுத்தி பார்க்க முடிகிறது.
அமெரிக்க அதிபரின் வருகையின் போது பயணிக்கக்கூடிய விஐபி பாதையை சுற்றி 2.7 கி.மீ பகுதிகளில் இருந்து நாய்கள் மற்றும் நிலகை இன மாடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அஹமதாபாத் மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, நாய்களை பிடித்து சென்று அப்பகுதிகளுக்கு வெளியே விட்டு விடுவதாக கூறப்பட்டுள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகைக்காக குஜராத் அரசு ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கொன்று வருவதாக பரப்பப்படும் செய்தி தவறானவை. அப்படி பகிரப்படும் செய்தியுடன் இடம்பெற்ற இறந்த நாய்களின் புகைப்படம் கடந்த ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் நகராட்சி தொழிலாளர்களால் கொல்லப்பட்டவை.