ட்ரம்ப் வருகைக்காக தாஜ்மஹால் சுத்தம் செய்யப்பட்ட வீடியோவா ?

பரவிய செய்தி
உ.பி யோகி சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கினாலும் அதை சுத்தம் பண்ண வச்சான் பாரும் கிருஸ்துவன் டிரம்பு..
மதிப்பீடு
விளக்கம்
Iqbal Cmi எனும் முகநூல் பக்கத்தில், ” உத்தரப் பிரதேசத்தின் யோகி அரசு தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கி இருந்தாலும், அதை சுத்தம் செய்ய வைத்தான் பாரு ட்ரம்ப் ” என்ற வாசகத்துடன் தாஜ்மஹால் அமைப்பை தீயணைக்கும் வாகனத்தின் மூலம் தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் காட்சிகளை கொண்ட வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது. ஆகையால், அதன் உண்மைத்தண்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய வந்திருந்த பொழுது உலக அதிசயமான தாஜ்மஹாலை தன் மனைவியுடன் சேர்ந்து பார்வையிட்ட செய்திகள் வெளியாகின. அதேபோல், அவரின் வருகைக்கு முன்பாக தாஜ்மஹால் தூய்மைப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எனினும் அவரின் வருகைக்காக தாஜ்மஹால் தூய்மைப்படுத்தப்பட்டது குறித்த செய்திகளில், தீயணைப்பு வாகனத்தை வைத்து தாஜ்மஹால் மீது தண்ணீர் அடித்து சுத்தம் செய்ததாக வீடியோவோ அல்லது செய்தியோ இடம்பெறவில்லை.
ஆகையால், வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து ஆராய்கையில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலிற்கும், வீடியோவில் இருக்கும் தாஜ்மஹால் அமைப்பிற்கும் வித்தியாசங்கள் இருப்பதை காண முடிந்தது. வைரல் வீடியோவில் இருக்கும் தரை அமைப்பு, டால்பின் அமைப்புகள் போன்றவை உண்மையான தாஜ்மஹால் பகுதியில் காணப்படவில்லை.
வைரல் வீடியோவில் இருக்கும் தாஜ்மஹால் அமைப்பு உண்மையான தாஜ்மஹால் போன்று அமைக்கப்பட்டு இருக்கும் மாதிரி அமைப்பு மட்டும். மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் Peoples Mall என அழைக்கப்படும் Amusement Park-ல் பார்க்கில் தாஜ்மஹாலை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி, இங்கு 7 உலக அதிசயங்களின் மாதிரி அமைப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மேற்காணும் வீடியோவில் 9.30 நிமிடத்தில் தாஜ்மஹாலின் மாதிரி அமைப்பை தெளிவாய் காணலாம். வைரலான வீடியோவில் இடம்பெற்ற டால்பின் அமைப்புகள் இங்கும் இடம்பெற்று உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் மாதிரி தாஜ்மஹால் அமைப்பை சுத்தம் செய்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோவே ட்ரம்ப் வருகைக்காக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சுத்தம் செய்யப்பட்டதாக தவறாக பரப்பப்பட்டு உள்ளது. எனினும், வைரல் செய்யப்படும் வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.