சபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்த திருப்தி தேசாய் விபத்தில் சிக்கினாரா ?

பரவிய செய்தி
ஐயப்பனின் திருவிளையாடல் ஆரம்பம்.. சபரிமலைக்கு போவேன் என்று அடம்பிடித்த திருப்தி தேசாய் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி.
மதிப்பீடு
சுருக்கம்
2016-ல் ஸ்ரீ கபாலிஸ்வரர் கோவிலுக்கு திருப்தி தேசாய் சென்ற போது அங்கு வசிப்பவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார். அவரின் கார் சேதப்படுத்தப்பட்டது.
விளக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பால் கண்டனங்கள் அதிகம் எழுந்தன.
இந்நிலையில், புனேவை சேர்ந்த Bhumata Brigade தலைவர் பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல உள்ளதாக அறிவித்தார். இதன் விளைவால் அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக வீண் வதந்திகள் பரவி வருகின்றன.
திருப்தி தேசாய் மயக்க நிலையில் இருக்கும் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் எடுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ கபாலிஸ்வரர் கோவிலின் கருவறைக்கு சென்று தரிசனம் செய்ய முற்பட்ட போது பஞ்சவாதி பகுதியில் வசிக்கும் மக்கள் 35 முதல் 40 பேர் ஒன்றுக்கூடி கற்களைக் கொண்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கற்களை வீசி தாக்கியதில் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்த திருப்தி தேசாய் நாசிக்கின் சின்னர் டேஷில் நகரில் உள்ள சாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். திருப்தி தேசாய் காரை சேதப்படுத்தி கொலை முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியன.
2016-ல் நிகழ்ந்த சம்பவத்தை சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் தொடர்புப்படுத்தி வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதாக கூறிய திருப்தி தேசாய்க்கு கடிதம் வழியாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் கொலை மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது.