சம்பாஜி பைட் நாசா & பென்டகன் ஆலோசகராக இருந்தாரா ? | உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கடந்த சில நாட்களாக தமிழ் சமூக வலைதளங்களில் ” சம்பாஜி பைட் ” எனும் பெயர் பரவி வருவதை பார்க்க முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் காலில் செருப்பு கூட இல்லாமல் எளிமையான தோற்றத்தில் இருப்பவரே சம்பாஜி பைட். நாசா மற்றும் பென்டகன் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தார் என்பது முதல் சம்பாஜி பைட் குறித்து அடுக்கடுக்கான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
சம்பாஜி பைட் கல்வித் தகுதி மற்றும் அவர் ஆற்றிய பணிகள் குறித்து தமிழில் பரவிய தகவல்கள் அனைத்தும் கடந்த ஆண்டிலேயே ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பரவியவையே.
மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 86 வயதான சம்பாஜி அம்மாநிலத்தில் உள்ள ஸ்ரீசிவா பிரதிஷ்டான் எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய ஆர்வலராக இருந்த பாபாராவ் பைட் உடைய மருமகனான சம்பாஜியும் முழுநேர ஆர்எஸ்எஸ் ஆர்வலராக இருந்தவர். பின்னர் அங்கு ஏற்பட்ட தகராறில் ஆர்எஸ்எஸ் போன்று ஸ்ரீசிவா பிரதிஷ்டான் ஹிந்துஸ்தான் எனும் அமைப்பை 1984-ம் ஆண்டு சாங்லி பகுதியில் உருவாக்கினார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சிவாஜி மற்றும் அவரின் மகன் சம்பாஜி குறித்து எடுத்துரைப்பதே.
2019-ல் இந்தியில் வெளியான தகவல்கள் குறித்து பிபிசி இந்தி பிரிவு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதில், சம்பாஜி பைட் அமைப்பான சிவ் பிரதிஷ்டான் உடைய செய்தித்தொடர்பாளர் நிதின் சவுக்லே கூறுகையில், சம்பாஜி பைட் அணு இயற்பியலில் தங்க பதக்கம் வாங்கியுள்ளார், புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அதேபோல், பைட் மகாராஷ்டிராவில் சமூக சேவை செய்து வருவதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களைக் கொண்டிருப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால், மற்ற தகவல்களை மறுத்து இருந்தார்.
” அவர் 100க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார், அமெரிக்க அரசாங்கத்தின் நாசா மற்றும் பென்டகனில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார், அணு விஞ்ஞானத்தில் ஆராய்ச்சி செய்து 67 க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டியிருக்கிறார் ” எனக் கூறும் தகவல்கள் முற்றிலும் தவறானவையே, வதந்தியே.
” இயற்பியலில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சிவாஜிக்கு தங்க சிம்மாசனத்தை உருவாக்க வேண்டும் என்றார் ” எனும் தலைப்பில் 2018-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில், பைட் எம்எஸ்சி-யில் தங்கப் பதக்கமும், இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றவர் என்றும், ஃபெர்குசன் கல்லூரியில் பேராசிரியர் பணியை கைவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு காலம் அங்கு பணியாற்றினார் என்கிற தகவல்கள் இல்லை. அதேபோல், அணுஇயற்பியல் எனக் குறிப்பிடவில்லை.
” ஃபெர்குசன் கல்லூரியை நடத்தி வரும் அமைப்பின் உறுப்பினர் கிரண் ஷாலிகிராம், பைட் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார், ஆனால் அவர் எவ்வளவு காலம் அங்கு பேராசிரியராக இருந்தார் எனத் தெரியவில்லை ” எனக் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.
புனேவைச் சேர்ந்த ஃபெர்குசன் கல்லூரியின் இணையதளத்தில் தேடிப் பார்க்கையில், அக்கல்லூரியில் அணுஇயற்பியல் சார்ந்த படிப்புகள் ஏதுமில்லை என நம்மால் கண்டறிய முடிந்தது.
ஃபெர்குசன் கல்லூரியின் தகவல்களில் இருந்து சம்பாஜி பைட் ஃபெர்குசன் கல்லூரியின் மாணவராகவோ அல்லது பேராசிரியராகவோ இருந்தார் என்பதை நிரூபிக்க ஆவணங்களோ அல்லது பதிவுகளோ இல்லை என அக்கல்லூரியைச் சேர்ந்த அலுவலர் பிபிசி இந்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
சம்பாஜி பைட் அணுஇயற்பியலில் தங்கப் பதக்கம் வென்றார் மற்றும் ஃபெர்குசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் என பல்வேறு செய்திகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்திற்காக ராய்காத் கோட்டையில் சம்பாஜி பைட்-ஐ சந்தித்தார் நரேந்திர மோடி. தேர்தல் பிரச்சார மேடையில் சம்பாஜி பைட்டை குருஜி என புகழ்ந்து இருந்தார். 2014 தேர்தலின் போது சம்பாஜி பைட் உடைய ஆதரவையும், வாழ்த்துக்களையும் பெற நரேந்திர மோடி மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் முன்வந்துள்ளனர். அவரின் ஆதரவு அம்மாநில அரசியல் தலைவர்களுக்கு தேவைப்படுகிறது.
பீமா கோரேகானில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஸ்ரீசிவா பிரதிஷ்சான் இந்துஸ்தானின் நிறுவனர் சம்பாஜி மற்றும் இந்து ஏக்தா அகாதியின் மிலிந்த் எக்போட் ஆகியோர் மீது பிம்ப்ரி காவல் நிலையத்தில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், பின்னர் அவ்வழக்கின் விசாரணையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, மேற்கொன்டு விசாரணை நடைபெற்றது.
2018 ஜூன் மாதம் நடைபெற்ற பேரணியில் சம்பாஜி பைட் தன் நிலத்தில் கிடைக்கும் மாம்பழத்தை உண்டால் தம்பதியர்களுக்கு ஆண் பிறக்கும் என்றும், கருவுறாமை பிரச்சனை இந்த மாம்பழங்கள் பயன்படும் என்கிற கருத்தை தெரிவித்தார். அதற்காக அவரின் மீது போடப்பட்ட வழக்கில் 2018 டிசம்பரில் ஜாமின் பெற்றார்.
முடிவு :
நம் தேடலில், நரேந்திர மோடியின் அருகே இருக்கும் சம்பாஜி பைட் 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றார், நாசா மற்றும் பென்டகன் ஆலோசகராக செயல்பட்டார், அணு விஞ்ஞான ஆராய்ச்சி செய்து 67-க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டினார் எனப் பரப்பு தகவல் முற்றிலும் தவறானவை, வதந்தியே.
சம்பாஜி பைட் அணுஇயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்றவர், ஃபெர்குசன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் என்பதில் உண்மை என்ன என்பதை எங்களின் தனிப்பட்ட முயற்சியில் உறுதிப்படுத்த முடியவில்லை. சம்பாஜி பைட் மீது வழக்குகளும் பாய்ந்துள்ளன. பின்னர் அவர் மீதான வழக்குகள் நீக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட பல கூடுதல் தகவல்களையும் அறிய முடிந்தது.
ஆதாரம்
The truth of ‘Modi’s Guru’ Sambhaji Bhide being a NASA scientist
Physics gold medallist wants to build golden throne for Shivaji
Fergusson College (Autonomous), Pune
Maharashtra: Rioting cases against Bhima Koregaon accused Sambhaji Bhide dropped
Right-wing activist Sambhaji Bhide gets bail in case over infertility-curing mango’ claim