சுனாமியில் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளை எஸ்.ஐ ஆக்கிய ஆசிரியர் !

பரவிய செய்தி
கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்து அனாதை ஆன 5 சிறுமிகளை எஸ்ஐ ஆக்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ! வாழ்த்துக்கள் ஐயா…
மதிப்பீடு
சுருக்கம்
ஐந்து சிறுமிகளை வளர்த்து காவல் துறையில் உதவி ஆய்வாளர் என்ற பொறுப்பிற்கு வரும் அளவிற்கு துணையாய் இருந்து ஆளாக்கிய ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் மாரியப்பன் வாழ்த்தப்பட வேண்டியவர்.
விளக்கம்
கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவக் குப்பங்களில் ஒன்றான புதுக்குப்பத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாது இருந்தனர். இதில், உண்ண உணவும், ஆதரவும் இன்றி கண்ணீருடன் தவித்த ஐந்து சிறுமிகளை கண்டு மனம் நொடிந்து போனார் மாரியப்பன்.
மாரியப்பன் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டுமல்ல சிறந்த கால்பந்து வீரரும்கூட. மாரியப்பன் இந்திரா காந்தி அகாடமியை தொடங்கினார். இதனை அறிந்த சில நல் உள்ளம் படைத்தவர்கள் பலர் அவருக்கு நிதி உதவி அளித்தனர். சிறுமிகள் அப்போழுது இருந்தே கால்பந்து விளையாடக் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.
கால்பந்து விளையாட்டில் சிறுமிகள் நன்கு தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள் எனலாம். எனினும், சிறுமிகளை எப்படியாவது உதவி ஆய்வாளராக காவல் துறையில் சேர்க்க வேண்டும் என நினைத்த மாரியப்பன் சிறுமிகளின் பள்ளி படிப்பிற்கு பிறகு இலவச கல்வியை அளிக்கும் கல்லூரியை தேடி வந்தார்.
இவர்களுக்கு கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி உதவ முன் வந்தது. அவர்களுக்கு தேவையான படிப்பு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைத்தது. இந்த ஐந்து மாணவிகளை தவிர பல மாணவிகளுக்கு ஆசிரியர் மாரியப்பன் முயன்ற உதவிகளை செய்துள்ளார். அதில், இன்னும் சில மாணவிகளுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் இடம் கிடைத்தது.
ஆசிரியர் மாரியப்பன் அவர்களிடம் ஐந்து வயதில் தஞ்சம் அடைந்த வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி ஆகியார் எஸ்.ஐ தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்ந்து உள்ளனர். இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. 2017 ஆம் ஆண்டில் ஆசிரியர் மாரியப்பன் மற்றும் 5 பெண்கள் பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது.
இந்த ஐந்து பெண்களின் மூலம் பல எஸ்.ஐ, ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே மாரியப்பன் அவர்களின் இலக்கு !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.