கொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடுவது போல் நடித்த காட்சி முட்டாள் ஆட்சியில் மக்களே!! பலி!!?
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மத்திய அரசு தொடங்கி வைத்தது. கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தும்கூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்று மக்கள் நல்வாழ்வு அதிகாரி மற்றும் செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகிய இருவரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து நாடகமாடுவதாக 43 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த வீடியோவை பகிர்ந்து இவர்களை நம்பி எப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்வது என்கிற கேள்வியும், சம்பந்தப்பட்ட இருவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்து வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகியதால் தமிழ் செய்தி சேனல்களும் வீடியோ குறித்து பதிவிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றது, தும்கூர் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி(டி.எச்.ஓ) நாகேந்திரப்பா மற்றும் மாவட்ட சுகாதார பயிற்சி மையத்தின் முதல்வர் மருத்துவர் எம்.ரஜனி ஆவர். இவ்விருவரும், வைரலாகும் குற்றச்சாட்டை மறுத்ததோடு, தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்து உள்ளனர்.
m.varthabharati.in எனும் கன்னட செய்தி தளத்தில், ” அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த நாகேந்திரப்பா, மாவட்ட மருத்துவமனையில் ஜனவரி 16-ம் தேதி மக்களின் விழிப்புணர்விற்காக தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். ஆனால், அதற்கான ஆவணங்கள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கையும், ஊடகத்திற்கு விளக்கம் அளிப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
குற்றச்சாட்டை தவறான செய்தி என மறுத்த மருத்துவர் ரஜனி, தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக விளக்க அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ” என வெளியாகி இருக்கிறது.
” கோ-வின் விண்ணப்பத்தின்படி, எங்கள் தடுப்பூசி செலுத்துவது ஜனவரி 16-ம் தேதி அல்ல. இருப்பினும், தடுப்பூசி செலுத்தும் பணியின் முதல் நாளான ஜனவரி 16-ம் தேதி முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகையால், நாங்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டி இருந்தது மற்றும் அதற்கான செயல்முறை தாமதமானது. ஊடகத்தின் எங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை பதிவு செய்துவிட்டு அவசரமாக செல்ல இருந்தனர். எனவே, இறுதியாக சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க முடிவு செய்தோம் ” என தும்கூர் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா இந்தியா டுடேவிற்கு பதில்அளித்துள்ளார்.
ஊடகத்தினர் கோரிக்கையை ஏற்று சில புகைப்படங்களுக்கு தடுப்பூசி செலுத்துவது போன்று போஸ் கொடுத்தனர் என உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் நிருபர் டிஎன்எம் செய்தி தளத்திற்கு தெரிவித்து உள்ளனர். போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது யாரோ எடுத்த வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
முடிவு :
நம் தேடலில், கர்நாடக மாநிலத்தின் தும்கூர் பகுதியில் மாவட்ட நல்வாழ்வு அதிகாரி மற்றும் செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகிய இருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்று புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகத்தினரின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி செலுத்துவது போல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து உள்ளனர். தடுப்பூசி செலுத்துவதற்கான செயல்முறைகள் முடிந்த பின்னர் ஊடகத்தினர் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நாகேந்திரப்பா மற்றும் மருத்துவர் ரஜனி தெரிவித்து உள்ளனர். அங்கிருந்த உள்ளூர் தொலைக்காட்சி நிருபரும் அதை உறுதி செய்து இருக்கிறார் என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.