இடிபாடுகளில் சிக்கியவரைக் காப்பாற்றக் கூப்பிடும் நாயின் புகைப்படம்| துருக்கியில் எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
நெஞ்சை உலுக்கும் புகைப்படம். துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலர் உயிர் இழந்த நிலையில், தனது எஜமானரை அவரது வளர்ப்பு நாய் கண்டறிந்து அவரை காப்பாற்ற வரும்படி கண்ணீருடன் கூப்பிடும் அந்த பாசமுள்ள நாய்
மதிப்பீடு
விளக்கம்
இடிந்த கட்டிடங்களுக்கு நடுவே மனிதரின் கை மட்டும் வெளியே தெரியும்படி இருக்க அருகே நாய் ஒன்று அமர்ந்து இருக்கும் புகைப்படமானது துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக் கொண்ட தன் உரிமையாளரை காப்பாற்ற வரும்படி நாய் கூப்பிடும் காட்சி என இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம் பதிவை சிராஜ் பாபு என்பவர் முகநூல் குழுக்களில் பகிர்ந்து உள்ளார்.
அக்டோபர் 30-ம் தேதி in the digital world எனும் ட்விட்டர் பக்கத்தில், துருக்கியில் எடுக்கப்பட்ட புகைப்படமென ஸ்பானிஷ் மொழியில் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர்.
Esta imagen en Turquía, me Tiene el corazón en trillones de pedazos #Terremoto #izmir #ContigoChv 💔💔 pic.twitter.com/mjAu5HBj7c
— En el Mundo Digital 🌐 →🆑 (@Chileevani) October 30, 2020
உண்மை என்ன ?
துருக்கியில் ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இஸ்மிர் நகரில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகளும் தாக்கின. செபிரிஹிசர் நகரிலும் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இஸ்மிர் பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்ற கூப்பிடும் நாய் என வைரலாகும் புகைப்படம் குறித்து அறிய ” Turkey earthquake dog rescue owner ” எனும் கீ வார்த்தைகளைக் கொண்டு தேடுகையில், Alamy.com எனும் புகைப்பட விற்பனை தளத்தில் 2018-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி இப்புகைப்படம் பதிவேற்றப்பட்டு உள்ளது என்பதை அறிய முடிந்தது. இது தொடர்பான பல புகைப்படங்கள் அந்த தளத்தில் இடம்பெற்று உள்ளன.
மற்றொரு புகைப்பட விற்பனை தளமான shutterstock.com தளத்திலும் அதே நாயின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவ்விரு தளத்திலும் இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் அளிக்கப்படவில்லை.
இது உண்மையான நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா என உறுதியாகக் கூற முடியவில்லை. எனினும், தற்போது துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கும் இப்புகைப்படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெளிவாய் தெரிகிறது.
மீட்புக் குழுவில் இருக்கும் மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய உதவி புரிபவை. துருக்கி நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் 30 மணி நேரம் சிக்கி இருந்த பூனையை மீட்பு குழுவில் இருந்த நாய் காப்பாற்றியதாக aa.com எனும் இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் தனது எஜமானரை கண்டறிந்து அவரை காப்பாற்ற வரும்படி கண்ணீருடன் கூப்பிடும் நாய் என பரவும் புகைப்படம் துருக்கி நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல, அப்புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகைப்பட விற்பனை தளங்களில் வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.