துருக்கி நிலநடுக்கம்: பழைய, தொடர்பில்லாத படங்களை பதிவிட்ட தந்தி டிவி

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் தொடர்ந்து நீடிக்கும் நிலநடுக்கத்தால் அந்நாடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களையும், இறந்த உடல்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 5,000 பேர் உயிரிழந்து உள்ளனர், 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் – உலகை உலுக்கிய புகைப்படங்கள் என தந்தி டிவி வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
தந்தி டிவி பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில், இடிபாடுகளில் உள்ள ஒருவரின் கை அருகே நாய் அமர்ந்து இருக்கும் புகைப்படம் கடந்த 2020 துருக்கி நிலநடுக்கத்தின் போதே வைரலானது. அப்போதே புகைப்படம் குறித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : இடிபாடுகளில் சிக்கியவரைக் காப்பாற்றக் கூப்பிடும் நாயின் புகைப்படம்| துருக்கியில் எடுக்கப்பட்டதா ?
Alamy.com எனும் புகைப்பட விற்பனை தளத்தில் 2018-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி இப்புகைப்படங்களின் தொகுப்பு பதிவேற்றப்பட்டு உள்ளது. அதில், துருக்கி நிலநடுக்கம் குறித்த எந்த தகவலும் இல்லை.
அடுத்ததாக இடிபாடுகளின் அருகே முதியவர் கையில் ரொட்டி துண்டுடன் கண்ணீர் விடும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2013ம் ஆண்டு netgazete எனும் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், வைரல் செய்யப்படும் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி அதே முதியவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
அதில், 1999ம் ஆண்டு நவம்பர்12ம் தேதி துருக்கியின் டியூஸ் நகரத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது புகைப்படம் எடுக்கப்பட்டது குறித்த கதை பகிரப்பட்டு உள்ளது.
அடுத்ததாக, இடிபாடுகளின் நடுவில் அமர்ந்து இருக்கும் சிறுவனின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019ல் அல்பானியா நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தி இப்புகைப்படம் பரப்பப்பட்டு இருக்கிறது.
ஆனால், புகைப்பட விற்பனை தளமான shutterstock இணையதளத்தில், ” Little boy near the destroyed house. Child trouble, loneliness concept ” எனும் தலைப்பில் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது. இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் அளிக்கப்படவில்லை. எனினும், அதே சிறுவன் அமர்ந்து இருக்கும்படி வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் பதிவாகி இருப்பதை பார்க்க முடிந்தது. இவை விற்பனைக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இறுதியாக பெண் கதறி அழும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 பிப்ரவரி 06ம் தேதி துருக்கி நிலநடுக்கத்துடன் தொடர்புப்படுத்தி பிபிசி உருது இப்புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு உள்ளது. ஆக, தந்தி டிவி இறுதியாக பயன்படுத்திய புகைப்படம் மட்டுமே சமீபத்தியது.
முடிவு :
நம் தேடலில், துருக்கி நிலநடுக்கம் தொடர்பாக தந்தி டிவி பதிவிட்ட புகைப்படங்களின் தொகுப்பில் முதல் மற்றும் மூன்றாவது புகைப்படங்கள் ஆனது புகைப்பட விற்பனை தளங்களில் வெளியானவை. 2வது புகைப்படம் 1999ம் துருக்கி நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது. இறுதியாக உள்ள புகைப்படம் மட்டுமே துருக்கி நிலநடுக்கத்துடன் தொடர்புடையது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.