நிலநடுக்க பாதிப்பிற்கு உதவிய பிரதமர் மோடிக்கு துருக்கி தபால்தலை வெளியிட்டதாகப் பரப்பப்படும் தவறான தகவல்

பரவிய செய்தி
துருக்கி(turkey) நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் கட்டிட விபத்துகள் போன்ற பேரிடர் காலத்தில், விரைந்து உதவி கரம் நீட்டிய எங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா அவர்களை கௌரவிக்கும் விதமாக, துருக்கி அரசாங்கம். நம்ம மோடி ஐயா தபால் தலை வெளியிட்டு உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
துருக்கி நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள், மீட்பு பணிக் குழுவை இந்தியா அனுப்பியது. இதற்கு நன்றி தெரிவித்து கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு துருக்கி அரசு தபால்தலை வெளியிட்டதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவை எதிர்த்து பகை காட்டிய நாடு துருக்கி
அதே நாடு நம் பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக” Postal Stamp “வெளியிட்டு கௌரவம் செய்துள்ளது…இந்தியாவிற்க்கு கிடைத்த மகான் மோடி ஜி pic.twitter.com/vwjveclA16
— G.Vijayan (@VijayVg39187426) March 6, 2023
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பிரதமர் மோடியின் தபால்தலையானது, உலகின் சிறந்த தலைவருக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறி துருக்கி அரசால் வெளியிடப்பட்டதாக கடந்த 2019ம் ஆண்டில் வைரலான படம். அதன் உண்மைத்தன்மை குறித்து 2019 ஏப்ரல் 13ம் தேதி யூடர்ன் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க: துருக்கி அரசு பிரதமர் மோடிக்கு தபால்தலை வெளியிட்டதா ?
President Erdoğan presented a special edition stamp collection of all the leaders attending the #G20AntalyaSummit https://t.co/3LHjkJHIGs
— G20 Turkey (@G20Turkey2015) November 18, 2015
2015 நவம்பர் 15-ம் தேதி துருக்கி நாட்டில் G20 மாநாடு நடைபெற்றது. அதில், G20 அமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். G20 மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களின் உருவம் பொறித்த தபால்தலையை துருக்கி அதிபர் எர்டோகன் வழங்கினார். இது தொடர்பான பதிவு 2015 நவம்பர் 15-ம் தேதி G20 துருக்கி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
G20 துருக்கி ட்விட்டர் பதிவில் இணைக்கப்பட்ட லிங்கில் மாநாட்டின் போது பங்கேற்ற தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களுக்காக வெளியிடப்பட்ட தபால்தலைகள் மற்றும் துருக்கி அதிபர் தபால்தலையை ஒவ்வொரு நாட்டின் தலைவரிடமும் காண்பிக்கும் புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. அதில், பிரதமர் மோடிக்கு தபால்தலையை காண்பிக்கும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !
இதற்கு முன்பாக, ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி நிறுத்தியதாக பாஜகவினரால் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது குறித்தும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், துருக்கி நிலநடுக்க பாதிப்பின் போது உதவியதற்காக பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்த தபால்தலையை துருக்கி அரசு வெளியிட்டதாகப் பரவும் தகவல் தவறானது. பாஜகவினரால் பரப்பப்படும் தபால்தலை படமானது 2015ல் துருக்கியில் நடைபெற்ற G2௦ மாநாட்டின் போது வெளியிடப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.