துருக்கி, சிரியா நிலநடுக்கத்திற்கு அணு உலை வெடிப்பு காரணம் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

துருக்கி சிரியா லெபனான் பூமி அதிர்ச்சியா அல்லது எதிரிகளின் சதியா ? கீழே உள்ள விடியோ பாருங்க. முதலில் அணு உலை வெடித்து சிதறியது பிறகு தான் பூகம்பம் ஏற்பட்டு உள்ளது.  ஆகாய தாக்குதலின் பரிணாம வளர்ச்சியாக பூமியில் இருந்து தாக்குதல் தொடுக்க முன்னோட்டமா இந்த சம்பவம்.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

துருக்கி மற்றும் சிரியா பகுதியில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டன. துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. இவ்விரு நாடுகளிலும் இதுவரையில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பின் அளவை பார்க்கும் போது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் துருக்கி, சிரியா பகுதியில் அணு உலை வெடித்துச் சிதறிய பிறகே, அப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் ‘தடா ரஹீம்’ வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகப்பெரிய வெடி விபத்து நிகழ்வதைக் காண முடிகிறது. இந்த வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

உண்மை என்ன ?

அணு உலை வெடித்ததாகப் பரவும் வீடியோவின் கீ ப்ரேம்களை கொண்டு கூகுளில் தேடினோம். இந்த சம்பவம் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நடந்த வெடி விபத்து என்பதை அறிய முடிந்தது.

Archive link

பெய்ரூட் பகுதியில் உள்ள துறைமுக சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றாமல் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த  2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக 2020, ஆகஸ்ட் 5ம் தேதி ‘விகடன்’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவ்விபத்தில்  78 பேர் உயிரிழந்ததாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ‘பிபிசி’ டிவிட்டர் பக்கத்திலும் 2020, ஆகஸ்ட் 5ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. 

Archive link 

மேற்கொண்டு தேடியதில், ‘Global News’ யூடியூப் பக்கத்தில் “Beirut explosion: Video shows new angle of the massive blast” என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 2020, ஆகஸ்ட் 8ம் தேதி பதிவிட்டுள்ள செய்தியில், அமோனியம் நைட்ரேட் வெடிப்பு சம்பவ வீடியோ இருப்பதை காண முடிகிறது.

மேலும், அந்த வீடியோவின் நிலைத்தகவலில் அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தில் 137 பேர் உயிர் இழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து பரவக்கூடிய வீடியோவிற்கும் துருக்கி, சிரியா நிலநடுக்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : துருக்கி நிலநடுக்கம்: பழைய, தொடர்பில்லாத படங்களை பதிவிட்ட தந்தி டிவி

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மைகள் குறித்து ‘யூடர்ன்’ கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

முடிவு :

நம் தேடலில், துருக்கி, சிரியா பகுதியில் உள்ள அணு உலை வெடித்ததைத் தொடர்ந்தே அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மை அல்ல. அது 2020, ஆகஸ்ட் மாதம் லெபனான் நாட்டில் நிகழ்ந்த அமோனியம் நைட்ரேட் வெடி விபத்து சம்பவம் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader