துர்க்மேனிஸ்தானில் 40 ஆண்டுகளாக மீத்தேன் கிணறு எரிகிறதா ?

பரவிய செய்தி
40 ஆண்டுகளுக்கு முன்னால் விபரீதம் தெரியாமல் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறு அணைக்க முடியாமல் தவிக்கும் துர்க்மேனிஸ்தான் அரசு. அதிகம் பகிருங்கள்…
மதிப்பீடு
சுருக்கம்
கரகும் என்ற பகுதியில் அதிக அளவில் இருந்த மீத்தேன் வாயுவை எடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட தவறுகளால் அங்கு உருவான பள்ளமானது 40 ஆண்டுகளை கடந்தும் எரிந்து கொண்டே இருக்கிறது. தற்போது அப்பகுதி சுற்றுலா தளமாக மாறி உள்ளது.
விளக்கம்
மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயுக்களை எடுப்பதற்கு பல பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். காரணம், அதனால் ஏற்படும் ஆபத்தின் விளைவால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என்ற ஐயத்தால்தான்.
துர்க்மேனிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சம்பவத்தால் நகரத்தின் வாயில் என அழைக்கப்படும் பள்ளத்தை உதாரணமாகக் கொண்டு மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை காண முடிந்தது. இதே துர்க்மேனிஸ்தான் பள்ளத்தை பற்றி முன்பே YOUTURN தரப்பில் மீம்கள் பதிவிடப்பட்டு உள்ளோம்.
துர்க்மேனிஸ்தான் நாட்டில் உள்ள கரகும் என்ற பாலைவனப்பகுதியில் Derweze கிராமத்திற்கு அருகே 230 அடி கொண்ட மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த பள்ளமானது நரகத்தின் வாசல் போன்று தீப்பிழம்பாய் காட்சி அளிக்கிறது.
1971 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அதிக அளவில் எண்ணெய் வளம் இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு துளைகளிட்டு வாயுவை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போழுது ஏற்பட்ட தவறால் துளையிட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளம் உண்டாகி அதிக அளவிலான மீத்தேன் வாயு வெளி வர ஆரம்பித்தது.
அதிக அளவில் வெளியான மீத்தேன் வாயு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பரவி ஆபத்தை ஏற்படுத்தி விடும் என எண்ணினார்கள். பரவும் வாயுவை எளிதாக கட்டுப்படுத்தும் வழிமுறையாக தீயிட்டு எரித்து விடலாம் என எண்ணி அந்த பள்ளத்திற்கு தீயிட்டனர். சில தினங்களில் வாயுவானது எரிந்து மீத்தேனின் வீரியம் குறைந்து விடும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால், 1971 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை அந்த பள்ளத்தில் நெருப்பு அணைந்தபாடில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக துர்க்மேனிஸ்தான் பள்ளம் எரிந்து கொண்டு இருக்கிறது. காலங்கள் கடந்து தற்போது அப்பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக மாறியுள்ளது.
பகலை விட இரவில் அப்பள்ளத்தில் எரியும் நெருப்பு திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போன்று நரகத்தின் வாயிலாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதி பரந்த நில பரப்பாக அமைந்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து உள்ளது.
எனினும், கரகும் பாலைவனப்பகுதியில் எண்ணெய் வளம் குவிந்து இருப்பதால் துர்க்மேனிஸ்தான் அரசு அடுத்த 20 ஆண்டுகளில் 75 மில்லியன் கன மீட்டர் அளவிலான இயற்கை வாயுவை ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.