ட்ரம்ப், கிம் ஜாங் சந்திப்பிற்கு திறவுகோலாக இருந்த இரு தமிழர்கள்..!

பரவிய செய்தி
ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரின் சிங்கப்பூர் சந்திப்பின் வெற்றிக்கு உழைத்த இரு தமிழர்கள். சிங்கப்பூரில் அரசியல் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரான கே.சண்முகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் இருவரின் தொடர் முயற்சியால் கிடைத்த பயனே அமைதிக்கான இந்த சந்திப்பு.
மதிப்பீடு
விளக்கம்
விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் கே.சண்முகம் என்ற தமிழை பூர்வீகமாக கொண்ட இரண்டு சிங்கப்பூர் அமைச்சர்கள் தொடர் முயற்சி மற்றும் பங்களிப்பை அளித்து அமெரிக்கா மற்றும் வட கொரியா என்னும் இரு தேசத் தலைவர்களின் அமைதிக்கான சந்திப்பிற்கு திறவுகோலாக விளங்கியுள்ளனர்.
வட கொரியா அணு ஆயுத சோதனையை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்தும், ஐ.நாவில் வட கொரியா மீது பொருளாதார தடை விதித்தும் வட கொரியா சோதனையை நிறுத்தும் நோக்கத்தில் இல்லை. இதனால், அமெரிக்கா மற்றும் வட கொரியா நாட்டின் தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் இருந்து வந்தது. இவர்களின் செயலால் மூன்றாம் உலகப் போர் மூலம் அபாயம் மூண்டது.
ஆனால், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் திடீரென தென் கொரியா எல்லைப் பகுதியில் அந்நாட்டு அதிபரை சந்தித்து ஆச்சிரியத்தை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்திப்பு முடிவாகியது. எனினும், இந்த சந்திப்பு பல சிக்கல்களை கடந்தே நிறைவேறியது.
இரண்டு நாட்டிற்கும் பொதுவான தேசமான சிங்கப்பூரில் இரு தேசங்களின் அமைதிக்கான சந்திப்பு ஜூன் 12-ம் தேதி நிகழ்ந்தது. சிங்கப்பூர் தேசம் அமெரிக்கா மற்றும் வட கொரியா உடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்துக் கொள்ளும் நாடுகளில் ஒன்று. ஆகையால், இரு தலைவர்களின் சந்திப்பு சிங்கப்பூரில் நிகழ்ந்தது.
எனினும், இறுதி நேரத்தில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் எந்தவொரு தடையும் வரக் கூடாது என சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சமீபத்தில் வாஷிங்டன், பெஜ்ஜிங், ப்யோங்யாங்-க்கு முக்கிய பயணங்களை மேற்கொண்டார். Changi விமான நிலையத்திற்கு வந்த அதிபர் கிம் ஜாம்-யை வரவேற்ற பாலகிருஷ்ணன், 70 வருட சந்தேகம், போர், ராஜாங்க பேச்சுவார்த்தை தோல்வி ஆகியவற்றிக்கு பிறகு இந்த சந்திப்பு நிகழ்கிறது என்றார்.
விவியன் பாலகிருஷ்ணன்:
57 வயதான விவியன் பாலகிருஷ்ணன் மருத்துவம் பயின்றவர். திரு. பாலகிருஷ்ணன் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர், சிங்கப்பூர் குடிமகன் ஆவார். அவரின் தந்தை தமிழர் மற்றும் தாய் சீனா தேசத்தை சேர்ந்தவர் ஆவார். மருத்துவம் படித்த பாலகிருஷ்ணன் ophthalmology-யில் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆளும் சிங்கப்பூர் கட்சியின் எம்.பியான பாலகிருஷ்ணன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளார்.
கே.சண்முகம் :
ட்ரம்ப் மற்றும் கிம்-ன் சந்திப்பிற்கு முழு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டவர் சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் காசிவிஸ்வநாதன் சண்முகம் அவர்கள்.
“ இரு வாரங்களாக இந்த சந்திப்பிற்கு தயாராகி வருகிறோம். சந்திப்பு நிகழும் இடத்தில் முழு பாதுகாப்பு வழங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்காக 5000 போலீஸ் மற்றும் அவசர உதவி குழு அனைத்தும் தயாராக இருக்கும் “ என்று கூறியிருந்தார்.
59 வயதான உள்துறை அமைச்சர் கே.சண்முகம் சிங்கப்பூர் குடிமகனாக இருந்தாலும் தமிழர் ஆவார். வழக்கறிஞராக இருந்த கே.சண்முகம் தன்னை பற்றிய தகவலில் தமிழ் இந்தியன் என்றேக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழைப் பூர்வீகமாக கொண்ட இரு சிங்கப்பூர் அமைச்சர்கள் இரு நாட்டின் அமைதிக்கான சந்திப்பில் திறவுகோலாக இருந்து அதில் வெற்றியும் பெற்றது பெருமைபட வைத்துள்ளது.