Two-stroke எஞ்சின் பைக்குகளுக்கு தடையா ?

பரவிய செய்தி
2 stroke இரு சக்கர வாகனங்களுக்கு விரைவில் தடை. 2019 ஏப்ரல் 1-ம் தேதி இந்தியா முழுவதும் 2 Stroke பைக்குகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
கர்நாடகா மாநிலத்தில் 2 stroke மூன்று சக்கர வாகனங்களுக்கு ஏப்ரல் 1, 2018 -ல் இருந்து தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த அறிவிப்பு 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
இரு சக்கர வாகன தொழில்நுட்பத்தில் டூ ஸ்ட்ரோக்(Two-stroke) எஞ்சின் முன்னோடியாக கருதப்படுகிறது. எனினும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் டூ ஸ்ட்ரோக் இரு சக்கர வாகனங்கள் குறைவே. அதில், மிகவும் பிரபலமானது யமஹா RX100 ,RD 350 ரக வாகனங்கள்.
டூ ஸ்ட்ரோக் எஞ்சின் அமைப்பு உடைய இரு சக்கர வாகனங்களுக்கு ஏப்ரல் 1, 2019 முதல் தடை விதிக்கப்படுவதாக செய்திகள் அதிகம் பரவி வருகிறது.
இந்திய ஒன்றியத்தில் அல்லது இந்திய மாநிலங்களிலோ டூ ஸ்ட்ரோக்(Two-stroke) இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேபோன்று RTO தரப்பிலும் அவ்வாறான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கர்நாடகா மாநிலத்தில் டூ ஸ்ட்ரோக்(Two-stroke) மூன்று சக்கர வாகனமான ஆட்டோவிற்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலத்தில் 2017-18 பட்ஜெட்டில், டூ ஸ்ட்ரோக்(Two-stroke) ஆட்டோ ஓட்டுனர்கள் Four stroke LPG ஆட்டோக்களை வாங்க அரசின் சார்பாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டூ ஸ்ட்ரோக்(Two-stroke) மூன்று சக்கர வாகனப் பயன்பாட்டை நிறுத்தி காற்று மாசு மற்றும் ஒலி மாசுப்பாட்டை குறைப்பதே நோக்கமாகும். மத்திய அரசு ஸ்கிராப் சான்றிதழ் வழங்கிய பிறகு ஆட்டோ உரிமையாளர்களுக்கு ரூ.30,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் “ என தெரிவித்து இருந்தனர்.
பெங்களூர் நகரத்தில் உள்ள மொத்த ஆட்டோக்களின் எண்ணிக்கை 1.82 லட்சம். இதில், டூ ஸ்ட்ரோக்(Two-stroke) கொண்ட ஆட்டோக்கள் தோராயமாக 20,000 இருக்கலாம் என்கிறார்கள். டூ ஸ்ட்ரோக்(Two-stroke) ஆட்டோக்களுக்கு மட்டுமே ஏப்ரல் 1, 2018 முதல் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், புதிய Four stroke LPG ஆட்டோக்களை வாங்க மானியம் ரூ.50,000 வரை உயர்த்த வேண்டும் என்றக் கோரிக்கையுள்ளது. மேலும், ஆட்டோ உரிமையாளர்கள் பதிவு சான்றிதழை நீக்க முன் வராத காரணத்தினால் இந்த தடைக்கு 2020 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
2005 முதலே டூ ஸ்ட்ரோக்(Two-stroke) கொண்ட ஆட்டோக்களுக்கான பதிவுகள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் டூ ஸ்ட்ரோக் ஆட்டோக்கள் மீதான தடையை டூ ஸ்ட்ரோக் இரு சக்கர வாகனங்களுக்கான தடை என தவறாக பரப்பி வருகின்றனர்.