தேங்காய் மட்டை நாரைப் பயன்படுத்தி டைபாய்டு காய்ச்சலை சரி செய்யலாம் எனப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

டைபாய்டு மற்றும் இரத்தம் அதிகரிக்க, தேங்காய் மட்டை நாரை வெயிலில் நன்கு காய வைத்து, சிறிது பொட்டாஷ்(Potash) சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்த கொதிக்க வைத்த  தண்ணீரை தினமும் காலையும், மாலையும் பருகி வந்தால் டைபாய்டு சரியாகும். மேலும் உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும். இதனை பருகி வந்தால் இரண்டு வாரங்களில் டைபாய்டு காய்ச்சல் சரி ஆகிவிடும்.

Facebook Link

மதிப்பீடு

விளக்கம்

தேங்காய் மட்டை நாரானது டைபாய்டு காய்ச்சலை சரி செய்யவும், ரத்த அணுக்களை அதிகரிக்கவும் பயன்படும் என சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

Advertisement

டைபாய்டு என்பது சால்மோனெல்லா டைபி(Salmonella typhi) எனும் பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு வகையான காய்ச்சல். இது சால்மோனெல்லா உணவு நோய்த்தொற்று ஏற்படுத்தும் அதே பாக்டீரியா குடும்பத்தைச் சார்ந்தது. டைபாய்டு காய்ச்சல் பொதுவாக மாசுபட்ட தண்ணீர், உணவு அல்லது ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்களிடம் இருந்து பரவும். இந்த காய்ச்சல் முன்னேறிய நாடுகளை விட முன்னேறும் நாடுகளில் தான் அதிகம் காணப்படும்.

டைபாய்டு காய்ச்சலை தேங்காய் மட்டை அல்லது அவற்றின் நாரைப் பயன்படுத்தி சரி செய்து விடலாம் என ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அந்தப் பதிவுகளில் வெவ்வேறு விதமான முறைகளில் செய்யப்படும் ஒரு மருந்து டைபாய்டு காய்ச்சலை சரி செய்யவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பயன்படும் எனப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

இதுகுறித்து அறிவியல்பூர்வமான தகவல்களை இணையத்தில் தேடியபொழுது, டைபாய்டு காய்ச்சல் சரி செய்ய தேங்காய் மட்டை நார் பயன்படும் என ஆதாரப்பூர்வமாக எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

Advertisement

டைபாய்டு காய்ச்சல் இறப்பு வரை கொண்டு செல்லும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்ளுமாறு கூறியுள்ளது.

இதுகுறித்து, டாக்டர் பிரவீன் குமார்(MBBS, MD, MRCP, DNB Gastro) அவர்களிடம் கேட்ட போது, “தேங்காய் மட்டை நார் உண்ணுவதற்கு தகுதியற்ற ஒரு பொருள். அந்த நாரில் எந்த ஊட்டச்சத்தும் இல்லை. எனவே தேங்காய் மட்டையை பயன்படுத்தி ஒரு காய்ச்சலை சரி செய்யலாம் அல்லது ரத்த அணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் எனக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்.

முதலில் டைபாய்டு காய்ச்சல் என தெரிந்த உடன் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்து அவர் பரிந்துரைக்கும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். சமையல் அறையில் பாத்திரம் கழுவ உதவும் தேங்காய் நாரை உட்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் டைபாய்டு காய்ச்சல் தீவிர விளைவுகளை ஏற்படுத்தி விடும் ” என விளக்கமளித்தார்.

முடிவு :

நம் தேடலில், டைபாய்டு காய்ச்சலை சரி செய்ய தேங்காய் மட்டை நார் எந்த விதத்திலும் உதவாது என தெரியவருகிறது. மேலும் டைபாய்டு போன்ற நோய்த்தொற்று ஏற்படும் பொழுது மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டறிவது அவசியம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button