பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக தவறாகப் பரப்பப்படும் நைஜீரியா பள்ளியில் எடுத்த வீடியோ!

பரவிய செய்தி
இதுக்கு ஆதரவாத்தான் UCC ய திமுக காரனுக எதிர்க்குறானுக போல..
மதிப்பீடு
விளக்கம்
ஒன்றிய அரசு சமீபத்தில் இந்தியாவில் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு போன்றவற்றிற்கு தனித்தனியான சட்டங்கள் உள்ளன. எனவே குடிமக்கள் அனைவரும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறி ‘பொது சிவில் சட்டத்தை’ அறிவித்தது.
இதற்காக பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வருகின்ற ஜூலை 28 வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பல செய்திகளும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் திமுக UCC-யை எதிர்க்க இது தான் காரணம் என்று கூறி வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணை, நான்கு முஸ்லீம் ஆண்கள் குச்சியால் தொடர்ந்து அடிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன கருமம்டா இது 🤦♂️
இதுக்கு ஆதரவாகாதான் #UCC ய திமுக காரனுக எதிர்க்குறானுக போல 🤮pic.twitter.com/Zsqr1y9dMT— Dr. 2G Spectrum 🍇 💰 (War Room: Navy 🇮🇳🪷⚓️) (@EURONGREYJOY007) August 5, 2023
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் இந்த வீடியோவோடு தொடர்புடைய புகைப்படங்கள் atinkanews என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 அக்டோபர் 11 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் “பிறந்தநாள் விழாவில் மது அருந்தியதாக கூறி முஸ்லிம் மாணவர்கள் இரக்கமின்றி சரமாரியாக அடித்துள்ளனர்” என்று குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவைத் தவிர, அந்த இளைஞர்கள் மற்ற மாணவர்களை அடிப்பது போன்ற வீடியோவையும் இதில் காண முடிந்தது.
View this post on Instagram
இதுகுறித்து தேடியதில், atinkanenews.net என்ற ஊடகம் இந்தப் பெண் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் புகைப்படத்தை பதிவிட்டு, கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில் “நைஜீரியா நாட்டின் குவாரா மாநிலத்தில் உள்ள மதரஸா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சில முஸ்லிம் மாணவர்கள், நண்பரின் பிறந்தநாள் விழாவில் மது அருந்தியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்ட தருணத்தை வைரலான வீடியோ காட்டுகிறது. ஆசிரியர்களின் உத்தரவின் பேரில் பள்ளியின் மூத்த மாணவர்கள் சிலரால் அம்மாணவர்கள் இரக்கமின்றி சரமாரியாக அடிக்கப்பட்டனர்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திகளை The U.S Sun மற்றும் Daily mail போன்ற ஊடகங்களின் இணையதளங்களிலும் காண முடிந்தது. அதில் பெற்றோரின் விருப்பத்தின் பெயரிலேயே இவ்வாறு தாக்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பொது சிவில் சட்டம் ஆதரவுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் எனப் பரப்பப்படும் பாஜகவின் தேர்தல் பிரச்சார எண் !
மேலும் படிக்க: இஸ்லாமியர் ஒருவரின் நான்கு மனைவிகள் சந்தித்த போது ஏற்பட்ட மோதல் எனத் தவறாகப் பரவும் லெபனான் வீடியோ!
முடிவு:
நம் தேடலில், திமுக UCC-ஐ எதிர்க்க இது தான் காரணம் என்றுக் கூறி பரவிவரும் வீடியோ இந்தியாவை சேர்ந்தது அல்ல என்பதையும், இது கடந்த 2021ன் போது நைஜீரியாவில் ஒரு பள்ளியைச் சேர்ந்த சில முஸ்லிம் மாணவர்கள், நண்பரின் பிறந்தநாள் விழாவில் மது அருந்தியதற்காக தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.