பொது சிவில் சட்டம் ஆதரவுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் எனப் பரப்பப்படும் பாஜகவின் தேர்தல் பிரச்சார எண் !

பரவிய செய்தி
நினைவூட்டல் UCC.. இரண்டு நாட்களில் 4 கோடி முஸ்லிம்கள் சமர்ப்பித்தனர், 1 கோடி கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்தனர். இந்துக்கள் மட்டும் சமர்ப்பிக்கவில்லை. அடுத்த 15 நாட்களில் UCC க்கு ஆதரவாக 60 கோடிஉங்கள் ஆதரவைப் பதிவு செய்ய (C) 9090902024 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுங்கள். தவறாதீர்..
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு IV-இல் சரத்து 44, பொது சிவில் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்குகிறது. ஆனால் இதுவரை இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தபடவில்லை. குறிப்பாக கோவா மாநிலத்தில் மட்டுமே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
எனவே இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வருகின்ற ஜூன் 14 வரை கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூலை 28 வரை சட்ட ஆணைய வலைதளத்தில் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு தனது அறிவிப்பை நீடித்துள்ளது.
இந்நிலையில் பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக் கணிப்பிற்கு இரண்டு நாட்களில் 4 கோடி முஸ்லிம்களும், 1 கோடி கிறிஸ்தவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இந்துக்கள் மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை. அடுத்த 15 நாட்களில் UCC க்கு ஆதரவாக 60 கோடி பேரின் ஆதரவைப் பதிவு செய்ய 9090902024 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று கூறி பாஜகவினர் பலரும் இந்த மொபைல் எண்ணை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
*நூறு கோடி இந்துக்களிடம் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பொது சிவில் சட்டத்தை ஆதரித்து மிஸ்டு கால் கொடுங்கள் என்று கேட்டால்* *இதுவரை பத்து லட்சம் பேரிடம் இருந்து வந்திருப்பது உலகமே வியக்கிறது.*
*காலக்கெடு நெருங்குகிறது. மிஸ்டு கால் கொடுங்கள்.*
*மிஸ்டு கால் மட்டும் 9090902024*
— Rajagopal Rajagopal (@RajagopalRajag7) July 13, 2023
एक संविधान
एक भूमि
एक राष्ट्र
एक भारत🇮🇳
I support Uniform Civil Code.Keep supporting on 9090902024#UniformCivilCode pic.twitter.com/oAJo9bpfwK
— Yogeshwar Dutt (@DuttYogi) July 7, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, முதலில் சமூக ஊடகங்களில் பரவி வரும் 9090902024 என்ற எண்ணிற்கு யூடர்ன் தரப்பிலிருந்து அழைப்பு விடுத்தோம். அழைப்பு உடனே துண்டிக்கப்பட்ட நிலையில், “சேவா, சுஷாசன் மற்றும் கரிப் கல்யாண் போன்ற திட்டங்களை உறுதியளிக்கும் மோடி அரசாங்கத்திற்கு ஆதரித்ததற்கு நன்றி. மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை அறிய 9yearsofseva.bjp.org ஐ கிளிக் செய்யவும் – பா.ஜ.க” என்று பாஜக கட்சியிலிருந்து யூடர்ன் எண்ணிற்கு உடனே ஒரு செய்தி (message) வந்தது.
மேலும் பரவி வரும் எண் குறித்து தேடியதில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 9090902024 என்ற எண் குறிப்பிடப்பட்டு, 9 வருட மோடியின் சேவைக்கு ஆதரவு அளிக்க இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே செய்தியை பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் காண முடிந்தது.
9 साल…
सेवा, सुशासन और गरीब कल्याण के!‘जनसंपर्क से जन समर्थन’ अभियान से जुड़ने के लिए 9090902024 पर मिस्ड कॉल करें। pic.twitter.com/RAAt06ntML
— BJP (@BJP4India) June 29, 2023
மேலும் அந்த மொபைல் எண் 2024 மக்களவைத் தேர்தலுக்காக பாஜகவால் “மிஸ்டு கால் பிரச்சாரம்” செய்வதற்காக தொடங்கப்பட்ட எண் என்பதையும் கண்டறிய முடிந்தது. இதை 2023 மே 31 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்தியா டுடே கட்டுரையின் மூலம் உறுதி செய்ய முடிந்தது.
அந்த கட்டுரையில், கட்சியின் ஆதரவை விரிவுபடுத்துவதற்காக பாஜகவால் ஒரு தனித்துவமான மிஸ்டு கால் பிரச்சாரம் தொடங்கப்பட்டது என்றும், 2019 ஆம் ஆண்டில் பாஜக கட்சி நடத்திய உறுப்பினர் சேர்க்கையை இது நினைவூட்டுவதாகவும் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பாக சில வாட்ஸ்அப் மெசெஜ்கள், அழைப்புகள் மற்றும் செய்திகள் தவறாக பரப்பப்படுவது குறித்து கடந்த ஜூலை 07 அன்று சட்ட ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர்களிடையே சில தொலைபேசி எண்கள் பரவி வருகின்றன, அந்த எண்கள் இந்திய சட்ட ஆணையத்துடன் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. “இந்த மெசெஜ்கள், அழைப்புகள் அல்லது செய்திகளுடன் சட்ட ஆணையத்திற்கு எந்த தொடர்பும் கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறோம்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
எனவே சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்திற்கு கருத்து தெரிவிக்குமாறு 9090902024 போன்ற எந்த மொபைல் எண்களையும் அறிவிக்கவில்லை என்பதை உறுதிபடுத்த முடிகிறது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க சட்ட ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தை பயன்படுத்துமாறு யூடர்ன் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
முடிவு:
நம் தேடலில், சமூக ஊடகங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கருத்து தெரிவிக்க 9090902024 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும் எனப் பரவி வரும் மொபைல் எண் தவறானது. அது பாஜக தனது 9 ஆண்டு சாதனைகளுக்கு ஆதரவு அளிக்க மொபைல் பிரச்சாரத்திற்காக அறிவிக்கப்பட்ட மொபைல் எண் என்பது குறிப்பிடத்தக்கது.