நீட் விசயத்தில் உதயநிதி உண்மை பேச வேண்டும் எனக் கார்த்திக் சிதம்பரம் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
உதயநிதி உண்மை பேச வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தெரிந்து கொண்டு வேண்டும் என்றே மக்களையும் மாணவர்களையும் உதயநிதி குழப்பி வருகிறார் காங்கிரஸ் MP கார்த்திக் சிதம்பரம்
மதிப்பீடு
விளக்கம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் இன்றளவும் இருந்து வருகிறது. இதுதொடர்பாக 2021ல் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
எனினும், இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். நீட் மசோதா குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனத் தெரிந்து கொண்டு உதயநிதி வேண்டும் என்ற மக்களை குழப்பி வருவதாக காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
எம்.பி கார்த்திக் சிதம்பரம் குறித்து பரப்பப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதலே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து தந்தி டிவி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில் அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, 2022 பிப்ரவரி 10ம் தேதி காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போலிச் செய்தி. ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பொய்களை வெளியிடுவது பாஜகவின் வாடிக்கையாகி வருகிறது ” என தந்தி டிவியை டாக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
Fake news. This is becoming a habit of @BJP4India to put up photoshopped falsehoods. @ThanthiTV. At least spell my name right. https://t.co/ja1lNlJe5g
— Karti P Chidambaram (@KartiPC) February 10, 2022
கார்த்திக் சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவையடுது 2022 பிப்ரவரி 10ம் தேதியன்றே தந்தி டிவி, ” இது போலியான செய்தி ” என சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு தந்தி டிவி நியூஸ் கார்டில் எடிட் செய்து பரப்பப்பட்ட போலியானச் செய்தியை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : நீட் ரிட் மனு குறித்து தவறாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி.. அதை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பாஜகவினர் !
இதேபோன்று, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு திரும்பப் பெறப்பட்டு, ஒரிஜினல் சூட் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்து தவறாகப் பொருள் கொள்ளும்படி தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நம் தேடலில், நீட் தேர்வு விசயத்தில் உதயநிதி உண்மை பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் கூறியதாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது. இந்த பொய் செய்தி கடந்த ஆண்டில் இருந்தே பரப்பப்பட்டு வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.