அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு தொடர்வதாக டைம்ஸ் நவ் வெளியிட்ட பொய் செய்தி !

பரவிய செய்தி
உதயநிதி பதவியிழக்க போவது உறுதி. உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசியது நாடு முழுவதிலும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகளை பெற்றது. இதற்கிடையில், உத்தரப் பிரதேச சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அளிப்பதாக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன பேச்சிற்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக வந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக டைம்ஸ் நவ் செய்தியின் கார்டு ஒன்று பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இந்து மக்கள் கட்சியின் எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்திலும் பதிவிடப்பட்டு இருக்கிறது.
மாட்டிக்கின்னாரு ஒருத்தரு மாட்டிக்கின்னாரு ஒருத்தரு 😂#DimwitUdhay pic.twitter.com/p6gqftWFkL
— Bagavath Pratheep (@Bagavathprathee) September 5, 2023
உண்மை என்ன ?
வைரலாகும் டைம்ஸ் நவ் செய்தியை பகிர்ந்த தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த செல்வகுமார், இப்பதிவை டைம்ஸ் நவ் சேனலின் யூடியூப் பக்கத்தில் இருந்து எடுத்ததாக மற்றொரு படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால், இதுகுறித்து டைம்ஸ் நவ் சேனலில் தேடுகையில், ” Udhayanidhi stalin Row News Live ” Sanatan Slandering Showdown | Supreme court ” என்ற தலைப்பில் உள்ள வீடியோ இடம்பெறவில்லை.
மேற்கொண்டு தேடுகையில், டைம்ஸ் நவ் யூடியூப் சேனலில், ” உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார் என்ற தவறான செய்தியை டைம்ஸ் நவ் வெளியிட்டது. அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டு உள்ளது. தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் ” என விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
உதயநிதியின் பேச்சுக்கு எதிரான வழக்குகள் குறித்து தேடுகையில், பீகார் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளதாக Live Law இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அதேபோல், உதயநிதிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் ம்மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர் என தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.
உதயநிதியின் பேச்சுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பான செய்திக்கு தலைமை நீதிபதியே நடவடிக்கை எடுக்க உள்ளதாக தவறான செய்தியை டைம்ஸ் நவ் பரப்பி உள்ளது.
முடிவு :
நம் தேடலில், உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கிறார் என்ற பரவும் டைம்ஸ் நவ் செய்தி தவறானது. அந்த செய்தியை அவர்கள் நீக்கி விட்டு, மன்னிப்பும் கேட்டு உள்ளனர் என்பதை அறிய முடிகிறது.