This article is from Jan 05, 2022

மகளிரணி செயல்படவில்லை என உதயநிதி கூறியதாக போலிச் செய்தியை பகிர்ந்த காயத்ரி ரகுராம் !

பரவிய செய்தி

மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் நான் செய்கிறேன் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுக கட்சியில் மகளிரணி செயல்படுவதில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

கடந்த டிசம்பர் 26-ம் தேதி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 2,000 இளம் பெண்கள் திமுக கட்சியில் இணைக்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான பெண்கள் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும் கூறப்பட்டது.

ஏற்கனவே திமுகவில் மகளிரணி இருக்கிறது. அதன் செயலாளராக எம்.பி கனிமொழி இருக்கிறார். இப்படி இருக்கையில், இளைஞரணி தலைவரான உதயநிதி இளம் பெண்களை கட்சியில் இணைத்தது கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகளில் வெளியாகியது.

இதையடுத்து, ” மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை ” என உதயநிதி கூறியதாகப் போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு பரப்பப்பட்டு இருக்கிறது.

Facebook link 

டிசம்பர் 26-ம் தேதி அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை என கோவையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வெளியான தந்தி டிவி செய்தியில் போலியான செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள். இது போலியான செய்தியென தந்திடிவி சேனலும் மறுத்து உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை, இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் தந்திடிவி நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader