அண்ணாமலை சிபிஐயில் புகார் அளிப்பேன் என்றதும் அமைச்சர் உதயநிதி ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ததாகப் பரப்பப்படும் பொய்

பரவிய செய்தி
சொத்து பட்டியல்-சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன் – அண்ணாமலை
17-ல் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து – உதயநிதி
மதிப்பீடு
விளக்கம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்து வீடியோ ஒன்றை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை ஏப்ரல் 15ம் தேதி வெளியிட்டது.
#JUSTIN | திமுக சொத்து பட்டியல் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சிபிஐயில் புகார் அளிக்க உள்ளேன்
"சிபிஐ அதிகாரிகளை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்"
சொத்து பட்டியல் குறித்து யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை#AnnamalaiFiles | #DMK | #ThanthiTV pic.twitter.com/aw1Ltjd9Mw
— Thanthi TV (@ThanthiTV) April 15, 2023
இதற்கிடையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 14 அன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் ஏப்ரல் 17 அன்று சென்னை சாஸ்திரி பவன் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவர் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ததாக புதியதலைமுறையின் சார்பில் நியூஸ் கார்டு ஒன்று ஏப்ரல் 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
#JUSTIN | 17-ல் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து: உதயநிதி#UdhayanidhiStalin | #DMK | #ShastriBhavan | @Udhaystalin pic.twitter.com/fOqdqBr0TH
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 15, 2023
இந்த இரண்டு செய்திகளையும் தொடர்புப்படுத்தி, அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ததாக பாஜக கட்சினர் பலரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காவலர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியது. இதில் மொத்தம் உள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ள நிலையில், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என தேர்வு அறிவிப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 14 அன்று தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “CRPF பணிக்கான தேர்வுகள் இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வரும் 17-ம் தேதி, சென்னையில் மொழி உரிமை காக்கும் படையாக திரள இளைஞர்-மாணவர் அணியினரை அழைக்கிறோம்.” என்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
#CRPF பணிக்கான தேர்வுகள் இந்தி&ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வரும் 17-ம் தேதி, சென்னையில் மொழி உரிமை காக்கும் படையாக திரள இளைஞர்-மாணவர் அணியினரை அழைக்கிறோம். pic.twitter.com/UcpFOLAGKd
— Udhay (@Udhaystalin) April 14, 2023
இந்நிலையில் தமிழ் உட்பட பிற மாநிலங்களின் ஆட்சி மொழிகளிலும் சிபிஆர்எஃப் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஏப்ரல் 09 அன்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் சி.ஆர்.பி.எப் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு செய்தி ஊடகங்கள் தங்களுடைய வலைதளப்பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளதைக் கீழேக் காணலாம்.
எனவே இதற்கு நன்றி தெரிவித்து ஏப்ரல் 15ம் தேதி அமைச்சர் உதயநிதி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “மொழிப்போரில் கழகம் என்றும் தோற்றதில்லை, மற்றுமொரு வரலாற்று வெற்றியாக CRPF தேர்வு 13 மாநில மொழியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம். குரல் கொடுத்து உரிமை காத்த மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கழக இளைஞர்-மாணவர் அணி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
மொழிப்போரில் கழகம் என்றும் தோற்றதில்லை, மற்றுமொரு வரலாற்று வெற்றியாக #CRPF தேர்வு 13மாநில மொழியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம். குரல் கொடுத்து உரிமை காத்த மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களுக்கு கழக இளைஞர்-மாணவர் அணி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். pic.twitter.com/6W5w11FQGN
— Udhay (@Udhaystalin) April 15, 2023
மேலும் அந்த அறிவிப்பில் “கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கழக இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து வரும் 17.04.2023 அன்று, சென்னை, சாஸ்திரி பவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வலியுறுத்தியதை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். தேர்வினை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கும் மகிழ்ச்சிக்கரமான நம்பிக்கைக்குரிய ஒரு செய்தியாகும்.” என்று உதயநிதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு:
நம் தேடலில், அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியல் தொடர்பாக சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதைத் தொடர்ந்தே ஏப்ரல் 17-ல் திமுக இளைஞர், மாணவர் அணி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை உதயநிதி ரத்து செய்ததாகப் பரவும் செய்தி தவறானது.
சிஆர்பிஎப் பணிக்கான தேர்வுகள் இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்ததன் பேரிலேயே ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது என்பதும், தற்போது தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.