உஜ்ஜைனியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிட்டவர்களுக்கு எதிராகக் கூடிய இந்துக்களின் கூட்டமா ?

பரவிய செய்தி

உஜ்ஜயினி நகரத்தில் சமீபத்திய முகரம் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பினர். அது நடந்த இரண்டாம் நாள் அந்த நகரத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் காவிக் கொடியுடன் பள்ளிவாசல் முன்பு கூடி “பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்; பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்” என்று கோஷமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கூடிய இந்து மக்களின் கூட்டத்தைப் பாருங்கள். இனி இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவார்களா?

மதிப்பீடு

விளக்கம்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மொஹரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோசத்தை எழுப்பியதற்கு எதிராக அடுத்த நாளே பள்ளிவாசல் முன்பாக கூடிய இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோசமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என கோசமிட்டு எதிர்ப்பை தெரிவித்ததாக காவி கொடிகளுடன் பெருவாரியாக கூடி இருக்கும் கூட்டத்தின் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Twitter link | Archive link 

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் பள்ளிவாசல் பகுதியில் இப்படியொரு பெருவாரியான கூட்டம் போராட்டத்தில் இறங்கியதாக எந்தவொரு செய்திகளும், வீடியோவும் கிடைக்கவில்லை.

Advertisement

வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2018-ம் ஆண்டு ராம நவமி விழாவிற்காக கர்நாடகாவில் கூடிய பெரும் கூட்டம் என வீடியோக்கள், செய்திகள் கிடைத்தன.

2018-ல் கர்நாடகாவில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து குறிப்பிட்ட பகுதியை எடுத்துள்ளனர். மேலும், ஊர்வலத்தில் ” பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்; பாகிஸ்தானுக்கே செல்லுங்கள் ” என வைரல் வீடியோவில் இடம்பெற்ற ஆடியோ போன்று ஏதும் இடம்பெறவில்லை.

பழைய வீடியோவில் இருந்து பள்ளிவாசல் அருகே கூட்டம் இருக்கும் குறிப்பிட்ட பகுதியை எடுத்து வேறு ஏதோ ஆடியோவை இணைத்து இருக்கிறார்கள்.

உஜ்ஜைன் பாகிஸ்தான் ஜிந்தாபாத் விவகாரம் :

ஆகஸ்ட் 19-ம் தேதி நள்ளிரவு உஜ்ஜைனியின் கீதா காலனியில்  நடைபெற்ற மொஹரம் விழாவில் அதிகளவில் கூட்டம் கூடியதோடு, பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டதால் காவல்துறை அங்கு சென்றுள்ளனர். வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 16 பேர் மீது தேசத்துரோக வழக்கை உஜ்ஜைன் காவல்துறை பதிவு செய்துள்ளனர். மேலும், 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டனர்.

இதற்கிடையில், ” அங்கு பதிவான வீடியோக்களில் ” காஸிஸாப் ஜிந்தாபாத் ” என எழுப்பப்பட்ட கோசங்கள் ” பாகிஸ்தான் ஜிந்தாபாத் ” என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக சில வீடியோக்களின் துணையுடன் உண்மை கண்டறிதல் இணையதளமான ஆல்ட் ஆகஸ்ட் 22-ம் தேதி கட்டுரை வெளியிட்டு இருந்தது. மேலும், அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த ஷப்னம் அலி, அங்கு பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோசங்கள் எழுப்பப்படவில்லை, காஸிஸாப் என்பவரை வரவேற்கும் வகையில் காஸிஸாப் ஜிந்தாபாத் எனும் கோசங்களே எழுப்பப்பட்டன எனக் கூறியதாக இடம்பெற்று இருக்கிறது.

பின்னர், உஜ்ஜைனியின் காவல்துறையினர் அதே நிகழ்வில் ” பாகிஸ்தான் ஜிந்தாபாத் ” மற்றும் ” காஸிஸாப் ஜிந்தாபாத் ”  கோசங்களை எழுப்புவதாக 10 நிமிட வீடியோவை வெளியிட்டது. ஆனால், அந்த வீடியோ போலியானது, நிகழ்ச்சியில் அப்படியோரு கோசம் எழுப்பப்படவில்ல  என நிகழ்ச்சியை நடத்திய காஸி தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி இருக்கிறது.

ஆனால், உஜ்ஜையின் காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர சுக்லா, ” காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட உண்மையான வீடியோவின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். நம்பகத்தன்மையில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை ” எனக் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

உஜ்ஜைன் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அம்மாநிலத்தில் சர்ச்சையாக மாறி உள்ளது. நீதிமன்ற விவரணைக்கு பிறகே வழக்கு மற்றும் வீடியோ தொடர்பான விரிவான தகவல்கள் வெளியே வர வாய்ப்புள்ளது.

முடிவு :

நம் தேடலில், உஜ்ஜைன் நகரில் மொஹரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியதற்காக அடுத்தநாள் பள்ளிவாசல் முன்பு கூடிய கூட்டமென பரப்பப்படும் வீடியோ 2018-ல் கர்நாடகாவில் ராம நவமி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவில் குறிப்பிட்ட பகுதியையும், வேறொரு ஆடியோவையும் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button