This article is from Aug 31, 2021

உஜ்ஜைனியில் பாகிஸ்தான் கோசம் எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

பாகிஸ்தான் ஜிந்தாபாத் இந்துஸ்தான் முர்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பியவர்களின் வீடுகளை இடித்து தள்ளிய சிவராஜ் சவுகான் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்றார்.

மதிப்பீடு

விளக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை எழுப்பியவர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை சிவராஜ் சவுகான் அரசு இடித்து தள்ளி உள்ளதாக போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்கள், தகர கூடார கடைகள் அகற்றும் 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Twitter link | Archive link 

உண்மை என்ன ?

உஜ்ஜைனியில் பாகிஸ்தான் கோசங்களை எழுப்பியவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டதா எனத் தேடுகையில், உஜ்ஜைனியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றியதாக ஆகஸ்ட் 27-ம் தேதி ஜி ஹிந்தி இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

செய்தியின்படி, ” உஜ்ஜைனி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற மகாகல் கோவிலை 10 மடங்கு விரிவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. மகாகல் விரிவாக்க பகுதியில் வரும் அனைத்து சட்டவிரோத வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளது. ஆக்கிரமிப்பு பகுதியில் குடியேறியவர்களுக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் வீட்டை காலி செய்ய 45 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கூறி இருந்தது ” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், வைரல் செய்யப்படும் வீடியோ எந்த செய்தியிலும் வெளியாகவில்லை. ஆகையால், வைரல் வீடியோவில் இடம்பெற்ற ஹோட்டல் ப்ரெசிடென்ட் என்பதை வைத்து தேடுகையில், உஜ்ஜைனியின் இந்தூர் சாலையில் நியூ ஹரிபாதக் ஓவர் பிரிட்ஜ் பகுதியில் அமைந்து உள்ளதாகக் காண்பித்தது.

மொஹரம் விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட பகுதி உஜ்ஜைனியின் கீதா காலனியில் இருந்து 2.5கி.மீ தொலைவில் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் இப்பகுதி அமைந்துள்ளது.

மேலும் படிக்க : உஜ்ஜைனியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசமிட்டவர்களுக்கு எதிராகக் கூடிய இந்துக்களின் கூட்டமா ?

இதற்கு முன்பாக, உஜ்ஜைனியில் மொஹரம் விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்களுக்கு எதிராக இந்துக்கள் பள்ளிவாசல் முன்பு கூடியதாக பழைய வீடியோ ஒன்றை எடிட் செய்து வைரல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

நம் தேடலில், உஜ்ஜைனியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோசம் எழுப்பியவர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகளை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் அரசு இடித்து அகற்றியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது.

உஜ்ஜைனியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள பணிக்காக ஆக்கிரமித்து கட்டப்பட்ட 200-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ தவறான தகவல் உடன் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader