இந்தியாவிற்கான பிரிட்டன் நிதியுதவியை திரும்ப கேட்பதாகப் பரவும் ஊடக வீடியோ.. உண்மை பின்னணி என்ன ?

பரவிய செய்தி
‘இந்தியா, எங்கள் 2.3 பில்லியன் பவுண்டுகளைத் திருப்பிக் கொடு!’, ஜிபி நியூஸின் தொகுப்பாளரான பேட்ரிக் கிறிஸ்டிஸ் இந்தியாவின் வெற்றிகரமான நிலவு பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறார், ஆனால் ‘நிலவின் இருண்ட பக்கத்தில் ஒரு ராக்கெட்டை ஏவ முடிந்த நீங்கள், வெளிநாட்டு உதவிக்காக இனி கைகளை நீட்டி எங்களிடம் வரக்கூடாது!’
மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரோ கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அதிகம் ஆய்வு செய்யப்படாத நிலவின் தென்துருவத்தை நெருங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த சில ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் இந்தியாவை விமர்சித்து வெளியிட்டுள்ள செய்திகள், இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. GP News என்ற ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள தொகுப்பாளர் பேட்ரிக் கிறிஸ்டிஸ் இந்தியாவிற்கு பிரிட்டன் வழங்கியுள்ள 2.3 பில்லியன் பவுண்டுகளை, இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அதில், “பிரிட்டன் 2016 முதல் 2021 வரை இந்தியாவிற்கு 2.3 பில்லியன் பவுண்டுகளை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு 57 மில்லியன் பவுண்டுகளை அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது. விண்வெளித் திட்டம் உள்ள நாடுகளுக்கு பிரிட்டன் இனி பணம் கொடுக்கக் கூடாது” என்று அவர் கூறியுள்ளதையும் காணமுடிந்தது.
Flight எடுத்து போன டூர் லாம் waste ah…. https://t.co/c5rmoML1S2
— Journalist நாடோடி ✍️ (@The_Paradhesi) August 27, 2023
இதேபோன்று பிரிட்டனைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான Britain First, இதே கூற்றுகளுடன் தன்னுடைய ட்விட்டர் பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது.
British aid to India will rise from £33.4million to £57million, despite India being rich enough to fund Moon landings.
UK has already sent India £2.3billion over 5 years.
We shouldn’t be sending them a penny of British worker’s taxes.
It’s clear where Slimy Sunak’s loyalty lies. pic.twitter.com/byBb2Ldtga— Britain First (@BFirstParty) August 24, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், 2023 மார்ச் 15 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையில், “இந்தியா 2015ல் இருந்து பிரிட்டனிடம் உதவி பெறுவதை நிறுத்தியது. 2012ன் பிரிட்டன் அரசாங்கக் கொள்கையின் படி, 2015 ஆம் ஆண்டிற்குள் இந்த நிதி உதவியை படிப்படியாக நிறுத்துவது குறித்து முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேடுகையில், இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் டெலிகிராப் வெளியிட்டுள்ள கட்டுரைகள் கிடைத்தன. அப்போதைய இந்திய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி, பிரிட்டிஷ் உதவியை ‘கடலை’ என்று வர்ணித்தது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் டைபூனை விட, பிரான்ஸ் போர் விமானமான ரஃபேலை இந்தியா விரும்புவதாகக் கூறியதை அடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் வெடித்தது.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டன் தன்னுடைய உதவிகளை திறம்பட செலவிடப்படுவதை கண்காணிக்கும் The Independent Commission for Aid Impact (ICAI) என்ற ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் தன்னுடைய உதவிகளை திறம்பட செலவிடப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. 2015க்கு முந்தைய காலங்களில் பிரிட்டனின் உதவியைப் பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்ததாக இந்த இணையதளத்தில் உள்ள அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. 2010 முதல், இந்தியாவுக்கு பிரிட்டனின் உதவி குறைந்துள்ளது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டில், சர்வதேச வளர்ச்சிக் குழு (IDC) ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டது, அதில், “பிரிட்டன் உதவி இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது” என்று கூறியது. அதற்கு பதிலளித்த “Department For International Development (DFID)” தனது குறிப்பில், இந்திய அரசாங்கத்திற்கு நேரடி நிதி உதவி வழங்குவதை பிரிட்டன் அரசாங்கம் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், 2016 மற்றும் 2020 க்கு இடையில் பிரிட்டன் இந்தியாவிற்கு சுமார் 1.9 பில்லியன் பவுண்டுகள் வழங்கியதாகக் கூறுகிறது. இந்த தொகையில் 480 மில்லியன் பவுண்டுகள் இருதரப்பு உதவிகளுக்கும் அடங்கும், அதில் வளர்ச்சி, தொழில்நுட்ப உதவி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி உதவிகளும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Guardian வெளியிட்டுள்ள செய்தியில், “ICAI மதிப்பீட்டின்படி, 2016 மற்றும் 2021க்கு இடையில், பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவிற்கு 2.3 பில்லியன் பவுண்டுகள் உதவி வழங்கியுள்ளது. இதில் அரசாங்கத்தால் நடத்தப்படும் பிரிட்டிஷ் சர்வதேச முதலீட்டிற்குரிய (BII) சிறு வணிகங்களின் கடன்களும் அடங்கும். இந்தியா ஏற்கனவே வளர்ச்சியடைந்த நிதி நிலையில் இருப்பதால், மேலும், பிரிட்டனின் நிதியானது திறன்பட உதவாமல் கிடக்கிறது மற்றும் இந்த நிதியால் இந்தியாவில் பெரிய மேம்பாடும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், 2010 முதல் பிரிட்டன் இந்தியாவுக்கு வழங்கி வந்த உதவியை குறைத்தது என்பதையும், 2015-இல் இந்திய அரசுக்கு செய்து வந்த உதவிகளை நிறுத்தியது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் பிரிட்டனில் இருந்து 2015-க்குப் பிறகு அனுப்பப்பட்ட நிதிகள், இந்தியாவில் புதிய சந்தைகளையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க உதவும் வணிக முதலீடுகளில் கவனம் செலுத்துவதற்காகவே என்பதும் தெளிவாகிறது.